கட்டாய விடுமுறைக் காலத்தில் சமையல் செய்ய கற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார் நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா.
இப்படிப்பட்ட ஓய்வு கிடைத்திருப்பதும் பல வகைகளில் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருப்பதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வாழ்க்கை திடீரென நிலைகுத்திப் போகிறது எனில் அனைத்தையும் மறுசீரமைப்பதற்கான வாய்ப்பும் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். திடீரென நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, எது தவறாகிப் போனது என்பதை மட்டுமே நினைக்கும் நாம், இதுவரை அனுபவித்த ஆசிர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க மறந்து போகிறோம்.
"நன்றி தெரிவித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை. நடப்பது நல்லதோ மோசமானதோ நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். எப்போதெல்லாம் நாம் வருத்தமடைகிறோமோ உடனுக்குடன் நாம் நன்றி தெரிவிக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிட வேண்டும்," என்று ஆன்ட்ரியா அறிவுறுத்தி உள்ளார்.
ஊரடங்குக் காலம் முடிவுக்கு வந்தபிறகு நாம் செய்யவேண்டிய முதல் பணி என்ன என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சமயத்தில் நம்பிக்கையுடன் இருப்பேதாடு அன்பைப் பரப்பவேண்டும் எனவும் ஆன்ட்ரியா கூறியுள்ளார்.
"தினமும் காலையில் கண் விழித்ததும் எனக்குக் கிடைக்கும் ஒரு கோப்பை காப்பிக்காகவும் முந்தைய இரவுப்பொழுதில் நிம்மதியாக உறங்கியதற்காகவும் கடைசியில் எப்படியோ சமையல் செய்யக் கற்றுக் கொண்டதற்காகவும் நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
"இது தவிர எனது நன்றி தெரிவிக்கும் பட்டியலில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. நாம் விரும்பிய பணிகளைச் செய்யமுடியாமல் போவதும் நாம் நேசிப்பவர்களிடமிருந்து விலகி நிற்பதும் கடினமான விஷயங்கள்தான். ஆனால், நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது நமது பாதுகாப்புக்காக மட்டுமல்ல, நாம் நேசிப்பவர்களின் பாதுகாப்புக்காகவும்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்," என்று கூறியுள்ளார் ஆன்ட்ரியா.
எப்போது பாடப்போகிறோம், மீண்டும் எப்போது சினிமாவில் நடிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்பும் ஏக்கமும் மனதில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் காத்திருப்பு நீண்டநாள் நீடிக்காது எனத் தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே நடிகை காஜல் அகர்வால், ஊரடங்கு வேளையில் தாம் வீட்டில் செய்துவரும் புதிய வேலைகள் குறித்துப் பதிவிட்டுள்ளார்.
இச்சமயம் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தில் இருந்து மீளவும் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலிருந்து விடுபடவும் தியானம் மட்டுமே சிறந்த வழி என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
நமக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபடுவதும் கூட மறைமுகமான உடற்பயிற்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த 6 மாதங்களாக நான் அணியமுடியாமல் போன உடைகள் எனது பீரோவை நிரப்பியுள்ளன. முதல் வேலையாக அவற்றையெல்லாம் அகற்றிவிட்டேன். சமையலில் ஆர்வம் உண்டு என்பதால் இந்த நேரத்தில் புதுப்புது உணவு வகைகளைச் சமைக்க கற்றுவருகிறேன்.
"வீட்டில் இருப்பதால் உடற்பயிற்சி செய்யமுடியாது என்பது தவறு. வயிறு, கால் தொடர்பான யோகாசனங்களைச் செய்யலாம். நான் உடற்பயிற்சி செய்துகொண்டே ரசிகர்களுடன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பேசுகிறேன். விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது என்றும் பொழுதைக் கழிக்கிறேன்," என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

