பொதுவாக திரைத்துறையில் இளம் நாயகிகளுக்குத்தான் மவுசும் வரவேற்பும் அதிகம் இருக்கும். 35 வயதாகிவிட்டாலே அக்கா, அண்ணி, அம்மா வேடங்கள்தான் கிடைக்கும் என்பார்கள். இது எழுதப்படாத விதிமுறையாகவும் உள்ளது.
ஆனால் காலத்தின் போக்கில் இந்த விதிமுறைகள் எல்லாம் மாறி வருகின்றன. இப்போதும்கூட ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் பத்து கதாநாயகிகள் அறிமுகம் ஆகிறார்கள். ஆனால் 30 வயதைக் கடந்த அனுபவ நாயகிகளின் மவுசு இன்னும் குறைந்தபாடில்லை.
இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் கோலோச்சும் 30 வயதைக் கடந்த நாயகிகள் யார்? அவர்கள் நடிக்கும் புதுப்படங்கள் ஆகியவை குறித்துப் பார்ப்போம்.
கடந்த 1998இல் இந்திப் படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார் ஜோதிகா. அதன் பிறகுதான் தமிழுக்கு வந்தார். ஆனால், பின்னர் அவர் இந்திப் பக்கம் தலைகாட்டவே இல்லை.
தமிழில் ஜோதிகாவுக்கு முதல் படம் 'வாலி'. அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என முன்னணி நாயகர்களின் படங்களுக்கு ஜோதிகாதான் முதல் தேர்வாக இருந்தார். இவருக்கென்று தனி ரசிகர்களும் உருவாகினர்.
இவர் நாயகியாக நடிக்கும் 4 படங்களாவது ஒவ்வோர் ஆண்டும் வெளியாகிவிடும். 2007இல் 'மொழி',' பச்சைக்கிளி முத்துச்சரம்', 'மணிகண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு 2015இல் '36 வயதினிலே' மூலம் கோடம்பாக்கத்தில் மறுபிரவேசம் செய்தவருக்கு தற்போது 41 வயதாகிறது.
இரண்டாவது சுற்றிலும் தனது ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, அதேசமயம் குடும்பக் கதைகளாகத் தேர்வு செய்து அசத்தி வருகிறார். 22 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாகவே பயணம் செய்வது சாதாரண விஷயம் அல்ல என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
திரிஷா அறிமுகமானது 1999இல் என்றாலும் அப்போது நாயகியின் தோழியாகவே நடித்திருந்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான 'மௌனம் பேசியதே'தான் அவர் நாயகியாக நடித்த முதல் படம். பிற மொழி வாய்ப்புகள் தேடி வந்தாலும் தொடர்ந்து தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
ஜோதிகாவைப் போல் இவரும், ரஜினி, கமல், விஜய், அஜித் என கோடம்பாக்கத்தின் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்து விட்டார். இப்போது திரிஷாவுக்கு 36 வயது. 17 ஆண்டுகளாக கோடம்பாக்கத்து இளவரசியாக வலம் வருபவர் இன்றளவும் இளமை மாறாமல் அப்படியே இருப்பதுதான் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. தற்போது 'பொன்னியின் செல்வன்', 'ராம்', 'ராங்கி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.
கோடம்பாக்கம் என்று பேசத் தொடங்கிவிட்டால் நயன்தாராவைத் தவிர்க்க முடியுமா?
2003இல் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் ஓராண்டு அங்குதான் கவனம் செலுத்தினார். அதன்பிறகு தமிழில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
'யாரடி நீ மோகினி', 'பில்லா', 'பில்லா-2' என இவர் நடித்த படங்கள் அனைத்துமே வரிசையாக வெற்றி பெற்றன. தற்போது 35 வயதான நிலையில் சினிமாவில் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளார் நயன்தாரா.
'விஸ்வாசம்', 'பிகில்', 'தர்பார்' என உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிப்பவர், மற்றொரு பக்கம் 'மாயா', 'அறம்', 'கோலமாவு கோகிலா' என நாயகியை மையப்படுத்தும் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். தற்போது 'நெற்றிக்கண்', 'மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் நயன் அலை வீசும் என்கிறார்கள் விமர்சகர்கள். தமன்னாவைப் பொறுத்தவரை அண்மையில்தான் 30 வயதைக் கடந்ததாகத் தகவல். யாருடனும் போட்டி போடாமல் தன் போக்குக்கு அமைதியாக நடித்து வரும் நாயகி என பெயரெடுத்துள்ளார். 2005இல் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தவர்.
எனினும் 2009 ஆம் ஆண்டுதான் தமன்னா குறித்து தமிழ் ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. படிக்காதவன், 'ஐயன்', 'கண்டேன் காதலை' என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்தவர். பிறகு 'பையா', 'சுறா', 'சிறுத்தை' என வெற்றிக்கொடி நாட்டவே தெலுங்கிலும் முன்னணி நாயகியானார்.
ஒருபக்கம் இளம் நாயகர்களுடன் நடிப்பார் மற்றொரு பக்கம் உச்ச நடிகர்களுடனும் ஜோடி சேர்வார் என்பதுதான் தமன்னாவின் சிறப்பு என்கிறார்கள் விமர்சகர்கள்.
அனுஷ்கா, சமந்தா இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள் என்பது தெரிந்த சங்கதிதான். சமந்தாவுக்கு 32 வயது எனில், அனுஷ்காவுக்கு 38 வயது. இருவருமே பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர்கள்.
சமந்தா திருமணத்துக்குப் பின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடங்கள் மட்டுமல்லாமல், குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றும் நல்ல கதாபாத்திரம் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்து வாக்கில ரெண்டு காதல்' படத்திலும் 'தி ஃபேமிலி மேன்' என்ற இணையத் தொடரிலும் நடிக்கிறார் சமந்தா. அனுஷ்கா நடிப்பில் 'சைலன்ஸ்' படம் வெளியாக உள்ளது. அடுத்து 'வேட்டையாடு விளையாடு-2' படத்திலும் ஒரு மலையாளப் படத்திலும் நடிப்பதாகத் தகவல்.
இதேபோல் காஜல் அகர்வாலும் தனது 34ஆம் வயதில் தமிழில் முன்னணி நாயகியாக அசத்துகிறார்.
தற்போது கமல்ஹானுடன் 'இந்தியன்-2', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா', துல்கர் சல்மானுடன் ஒரு படம் என்று தொடர்ந்து பறந்து பறந்து நடித்துக் கொண்டிருப்பவர் 'பாரிஸ் பாரிஸ்' பட வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியா பவானி சங்கருக்கும் இப்போதுதான் 30 வயதாகிறது. இருவருமே தனி பாணி நடிப்பை வழங்குபவர்கள்.
ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகே நாயகியானார். அதன்பிறகு கனமான கதாபாத்திரங்கள் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து இன்று தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளார். அம்மா, நகரத்துப் பெண், விளையாட்டு வீராங்கனை என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் அசத்தல் நாயகி என்று பெயரெடுத்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் 2017இல்தான் தொலைக்காட்சியில் இருந்து 'மேயாத மான்' படம் மூலம் அறிமுகமானார். இப்போது 'குருதியாட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'வான்', 'இந்தியன்-2', 'பொம்மை' என இவர் நடிப்பில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

