கொரோனா கிருமித் தொற்று குறித்து வெளியாகும் தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தினாலும் மக்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டுமென நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
தேவையற்ற தகவல்களை தலையில் ஏற்றிக்கொண்டு வீண் மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. விடுப்பு எடுக்கமுடியாமல் தவித்தவர்களும்கூட வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதில் விருப்பமில்லை என்கிறார்கள். இதனால் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டிலேயே இருப்பதால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும் என ராஷி கன்னா விவரித்துள்ளார்.
"இப்போதைய சூழ்நிலையில் நாட்டு நடப்பு குறித்த தகவல்களை, குறிப்பாக கிருமித் தொற்று குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம்தான். எனினும் இது தொடர்பாக அளவுக்குமீறி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.
"குறிப்பாக இத்தனை பேர் இறந்துவிட்டனர். நாடே பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளது. உலகமே அழிந்துவிடப் போகிறது என்கிற ரீதியில் பரவும் தகவல்களை நம்பவேண்டாம். இந்த விஷயங்களை நம் தலைக்குள் ஏற்றிக் கொண்டால் வீண் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும்," என்று ராஷி கூறியுள்ளார்.
மக்கள் தற்போது தங்கள் எண்ணங்களையும் கவனத்தையும் நல்ல விஷயங்களின் பால் திருப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அப்போதுதான் நிம்மதியாகவும் உற்சாகமாகவும் இருக்க முடியும் என அறிவுறுத்தி உள்ளார்.
"நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தவறாமல் யோகா, தியானம் செய்யுங்கள். இதனால் மனதுக்கு அமைதி, ஆனந்தம் கிடைக்கும். பயத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக இதைச் செய்யவேண்டும்.
"இந்த நேரத்தில் அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தும், நேரம் கிடைக்காமல் ஒதுக்கி வைத்தோமோ அதையெல்லாம் செய்யுங்கள். வீட்டில் அதைத்தான் நான் செய்கிறேன். இப்போது தன்னம்பிக்கைதான் தேவை," என்று ராஷி கன்னா மேலும் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் தமது சமூகவலைத்தளப் பக்கத்தில், மனிதர்கள் இந்தப் பூமியின் விருந்தினர்களே தவிர எஜமானர்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தனிமையில் இருக்கச் செய்துள்ள நேரத்தில், அனைவரும் மன அழுத்தம், பதற்றம் என தனிமையின் பாதிப்பை உணர நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிருகங்களும் அதேபோன்ற உணர்ச்சிகளை இப்போது உணரும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"மனிதர்களாக, நாம் ஒரு சூழலை அனுபவிக்கும் வரை அதே சூழலில் இருக்கும் மற்றவர்களின் நிலையைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஆனால் நாம் இப்போது சிறைப்படுத்தப்படுவது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டோம். அந்த பச்சாதாபத்தை, இந்தப் பூமியை நாம் பங்கு போட்டுக் கொண்டிருக்கும் மற்ற உயிர்களிடத்திலும் காட்டுவோம்.
"லட்சக்கணக்கான மிருகங்கள் அதன் வாழ்க்கை முழுவதும் தனிமையில் இருக்கின்றன. தனிமையில் இந்த மிருகங்கள் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளுதல் போன்ற கவலைக்குரிய விஷயங்களைச் செய்து கொள்கின்றன. மனநலம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. எனவே, தனிமை உங்களுக்குச் சோர்வைத் தருகிறது எனில் விலங்குகளுக்கும் அப்படித்தான் இருக்கும். இதைப் புரிந்து கொள்வோம்," என்று ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.
எந்த உயிரினமும் சிறைபட்டு வாழக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மனிதர்கள் தங்களை இந்தப் பூமியின் எஜமானர்களாக கருதக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாகப் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர்.

