ஊரடங்கு நிலையில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும்போது தேவையற்ற சிந்தனைகள் தோன்றும் என்பதால் அனைவரும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்று இளம்நாயகி நிதி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைத் தகவல்களும் புள்ளிவிவரங்களும் நிறைய உள்ளன என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆனால் அதை விடுத்து வீண் தகவல்களை, வதந்திகளை அறிந்து வருகிறோம். இந்த ஊரடங்கின்போது பல முக்கியமான நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன்.
"உதாரணமாக ஒடிசாவில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க அம்மாநில அரசு 54 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
"இந்த இக்கட்டான வேளையில் யாரும் வெறுப்புணர்ச்சியைப் பரப்பக்கூடாது. ஆனால், பலர் இந்த வேலையைத்தான் தங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டு இடைவிடாமல் செய்கிறார்கள். இது வருத்தமளிக்கிறது.
"ஒருவரது பயணம் எப்போது முடியும் என்பது நமக்குத் தெரியாது. எனவே நம்மை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்ளாமல், தான்தோன்றித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் சில அறிக்கைகளை வெளியிடுவதால் நாம் பெரிய சக்தியாகிவிட முடியாது. ஆனால், சமுதாயத்தில் நேர்மறையான வகையில் ஆதிக்கம் செலுத்தினால் நாம் உண்மையில் அப்படியொரு சக்தியாக உருவெடுக்க முடியும்.
"அனைவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்த ஊரடங்கு வேளையில் அனைவரும் நேர்மறையான சக்தியாக இருப்பதில் கவனம் செலுத்துவோம்," என்கிறார் நிதி அகர்வால்.
தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்தில் நடித்து வருபவர் தமிழில் மேலும் சில நல்ல வாய்ப்புகள் தேடி வந்திருப்பதாகச் சொல்கிறார்.
கொரோனா கிருமித் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் திரையுலகத்தினர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இளம் நாயகி நிதி அகர்வாலும் தனது பங்களிப்பை அளிக்க உள்ளார்.
பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா பெயரில் இயங்கி வரும் சமூக சேவை அமைப்பின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தங்களுடன் இணைந்து செயல்படுமாறு பில்கேட்ஸ் அமைப்பு நிதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
இளைய சமுதாயத்தினர் மத்தியில் கொரோனா குறித்து மட்டுமல்லாமல் இந்தியா குறித்து மேலும் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பில்கேட்ஸ் அமைப்பின் திட்டமாம்.
இதற்காக இளையர்கள் மத்தியில் ஒரு புதிர் போட்டி (Quiz) நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
அதில் இந்தியா குறித்து துல்லியமான புள்ளிவிவரங்கள், உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்க உள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் இளையர்கள் திரளாகப் பங்கேற்கவேண்டும் என்கிறார் நிதி அகர்வால்.

