தனது மகளின் நினைவுதினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் பின்னணிப் பாடகி சித்ரா பதிவிட்டிருப்பது அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
மகளை இழந்த காயம் இன்னும் அதே வலியுடன் தன் மனதில் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டிசம் (கற்றல் குறைபாடு) பாதித்த தனது மகள் நந்தனாவுடன் கடந்த 2011ஆம் ஆண்டு துபாய் சென்றிருந்தார் சித்ரா. துரதிருஷ்டவசமாக நந்தனா அங்கு உயிரிழந்தார்.
இந்நிலையில் மகளை இழந்த துக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சித்ரா.
"ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு காரணம் உண்டு என்றும் அதன்பின்னர் மறு உலகத்திற்குச் செல்வோம் என்றும் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். காலம் சிறந்த மருந்து என்றும் சொல்வார்கள்.
"ஆனால், கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியும்... இவையெல்லாம் உண்மையல்ல என்று... காயம் இன்னும் அப்படியே வலியுடன் இருக்கிறது," என்று சித்ரா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமானோர் பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

