மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ' படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
எனினும் இப்படத்தின் செயற்கைக்கோள் மற்றும் பிறமொழி பதிப்புகளின் உரிமை பல கோடிகளுக்கு விலை போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதை தனக்குச் சொந்தமானது என இயக்குநர் போஸ்கோ பிரபு என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வெளியாகவில்லை.
எனினும் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இப்படத்தை வேறு மொழிகளில் வெளியிடவும் படத்தின் மொழிமாற்றம், செயற்கைக்கோள் உரிமைகளுக்கும் இடைக்காலத்தடை விதித்தும் உத்தரவிட்டது.
எனினும் தடையை மீறி தெலுங்கில் 'சக்தி' என்ற புதிய தலைப்பில் மொழிமாற்றம் செய்து இப்படம் கடந்த மார்ச் 20ஆம் தேதி வெளியாக இருந்தது. ஊரடங்கு உத்தரவால் இது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் தனியார் இணையதளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தை தொடர்புகொண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தெரியப்படுத்தி உள்ளார் போஸ்கோ பிரபு.
இதனால் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த 'ஹீரோ'வின் தெலுங்குப் பதிப்பை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
"நீதிமன்ற உத்தரவு குறித்து அத்தனியார் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினேன். மேலும் உத்தரவின் நகலையும் அனுப்பினேன். இதையடுத்தே இணையதளத்தில் இருந்து 'சக்தி' திரைப்படத்தை நீக்கி உள்ளனர். விரைவில் நீதிமன்றத்திலிருந்து நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் போஸ்கோ பிரபு.
இதற்கிடையே 'ஹீரோ' கதை இவருக்கு சொந்தமானது என தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

