வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாலும் அது சாத்தியமாவது அவ்வளவு சுலபமல்ல.
நடிகர் நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பது, வெற்றிக்குப் பின் அவர்களின் சம்பளம் அதிகரிப்பது, இதனால் தயாரிப்புச் செலவு உயர்வது என பல விஷயங்களை கடந்து வரவேண்டியிருக்கும்.
இந்நிலையில் 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை உருவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற படம் இது. நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். விஜய் சேதுபதியுடன் பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரண், சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வெற்றிக்குப் பிறகு 'சூது கவ்வும் 2' எப்போது என்ற கேள்வி, விஜய் சேதுபதி, இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் சி.வி.குமார் ஆகியோரைத் துரத்திக் கொண்டே இருந்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 'துப்பறிவாளன்-2', 'மாஃபியா-2', 'இந்தியன்-2' என மேலும் பல இரண்டாம் பாகங்கள் தயாரிப்பில் உள்ளன.
இவற்றின் தயாரிப்பு செலவு அதிகம் என்றாலும் கதைக்கருவும் நடிகர்களின் பலமும் இருப்பதால் தயாரிப்பு தரப்பில் நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளனர்.
அதிலும் 'சூது கவ்வும்' படத்துக்கு இப்போதே விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

