சில கேள்விகள், சில விஷயங்கள் நடிகைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் இரு நாயகிகள் சங்கடப்படும் விஷயங்களைப் பார்ப்போம்.
இளம் நடிகைகளிடம் ரசிகர்களும் செய்தியாளர்களும் மறக்காமல் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. யாரையேனும் காதலிக்கிறீர்களா, காதல் அனுபவம் உண்டா? என்பதுதான் அது.
இந்தக் கேள்விக்கு சொல்லிவைத்தாற் போல், இப்போது காதலிக்க நேரமில்லை என்ற பதிலையே பெரும்பாலான நடிகைகள் சொல்வார்கள்.
ஆனால் ரகுல் பிரீத்சிங்கிடம் காதல் குறித்துக் கேள்வி எழுப்பினால் 'அட போங்கப்பா.. வேறு வேலை இல்லை. காதலைப் பற்றி எல்லாம் நான் யோசிப்பதே இல்லை' என்கிறார்.
அவரது அலுப்புக்குக் காரணம் இதுதான். சிறு வயதில் இவர் தனது தம்பியுடன் ஒரே பள்ளியில்தான் படித்தாராம். தம்பிக்கு இவர்மீது பாசம் அதிகமாம்.
"என்னிடம் மாணவர்கள் யாராவது பேச்சுக் கொடுத்தால் தம்பிக்குப் பிடிக்காது. உடனே அவர்களிடம் சண்டைக்குப் போவான். இல்லையென்றால் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பெற்றோரிடம் சொல்லிவிடுவான். நட்புக்காகக்கூட மாணவர்களிடம் நான் பேச முடியாது.
"ஒருமுறை நானும் இரண்டு மாணவிகளும் வகுப்புத் தோழனுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கையில் தின்பண்டம் வைத்திருந்தேன். இதைப் பார்த்த என் தம்பி வீடு திரும்பியதும் பெற்றோரிடம் ரகுல் ஒரு பையனுக்கு தின்பண்டங்கள் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். நான் பார்த்தேன் என்றுசொல்லிவிட, ரகளையாகி விட்டது.
"ஒருவகையில் தம்பி அமன் இப்படியெல்லாம் நடந்து கொண்டதால்தான் காதல் மீது எனக்கு ஈர்ப்பு இல்லை போல் இருக்கிறது. இதுவரை நான் யாருடைய காதல் வலையிலும் விழுந்ததில்லை. யாரையும் காதலிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியதும் இல்லை," என்கிறார் ரகுல் பிரீத்சிங்.
நன்கொடை, நிதி என்றால் அண்மைய சில தினங்களாக சங்கப்படுகிறார் தமன்னா. அவருக்கு தமிழ்த் திரையுலகத்தினர் திடீர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நிறைய சம்பாதிப்பவர் பிரச்சினை, தேவை என்று வரும்போது தெலுங்குத் திரையுலகம் பக்கம் நிற்பதாக சிலர் சாடியுள்ளனர்.
விஷயம் இதுதான். ஊரடங்கால் திரையுலகப் பணிகள் முடங்கியுள்ளன. வேலையில்லாததால் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலையில் வசதி படைத்த திரையுலகப் புள்ளிகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கங்கள் மூலம் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் பங்குக்கு என தனியாக நிதி திரட்டி திரை உலகினருக்கு உதவி வருகிறார். இதை அறிந்த முன்னணி நடிகர், நடிகைகள் அவரிடம் நிதியளித்து வருகின்றனர்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா 3 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதே வேளையில் மும்பையைச் சேர்ந்த காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சம், தமிழ்ச் சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சம் வழங்கி உள்ளார்.
நயன்தாராவும் தமிழ்த் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நிதியளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தமிழ் சினிமா மூலம் கதாநாயகியாக ஏற்றம் கண்டுள்ள தமன்னா தெலுங்கு சினிமா திரைப்பட தொழிலாளர்களுக்கு மட்டும் நிதியளித்திருப்பதும் தமிழ் சினிமாவை புறக்கணித்திருப்பதும் வருத்தமளிப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதையடுத்து தமன்னா கோடம்பாக்கத் தொழிலாளர்களுக்காகவும் நிதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இதுவரை திரைப்படத் தொழிலாளர்களுக்கும் நலிவடைந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் எந்தவித உதவியும் செய்யவில்லை என்ற புகார் வலுத்து வருகிறது.
இதையடுத்து நிதி அளித்து உதவாத நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் சில நடிகர்கள் சத்தமின்றி பலருக்கு உதவி செய்து வருவதையும் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு உதவுமாறு ஃபெப்சி தலைவர் செல்வமணி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

