ஜோதிகா அனைவரையும் மனதாரப் பாராட்டுவதாக கூறுகிறார் பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் ஜோதிகாவைப் போன்ற ஒரு பெரிய நடிகை இந்தளவு எளிமையாக இருப்பார் என தாம் எதிர்பார்க்கவே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் 'சில்லுக்கருப்பட்டி'.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் வாங்கி வெளியிட்டது.
இதில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சங், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. பல முன்னணி இயக்குநர்கள் படம் பார்த்து பாராட்டுத் தெரிவித்தனர். சில விருது விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.
அண்மைய விருது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜோதிகா, தமிழ் சினிமாவில் ஒருசிலருக்குத்தான் காதலை மையப்படுத்தி கதை எழுதும் ஆற்றல் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை என்றும் 'சில்லுக்கருப்பட்டி' படம்தான் கடந்த 10, 15 ஆண்டுகளில் தாம் பார்த்த சிறந்த காதல் படம் என்றும் ஜோதிகா கூறினார்.
"இதை தைரியமாகச் சொல்வேன். மற்ற படங்கள் அனைத்திலுமே காமம்தான் இருந்தது. பெண்களின் பார்வையில் அது காதல் அல்ல, காமம்தான்.
"என்னையும் சூர்யாவையும் பொறுத்தவரை காதல் படங்களுக்கான கதைகளை எழுத பெண் இயக்குநர்கள் முன்வர வேண்டும்," என்று ஜோதிகா மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜோதிகாவின் இந்தப் பேச்சை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹலிதா ஷமீம், மேடையில் பேசிய கருத்து களைத்தான் தம்மிடம் தனிப்பட்ட முறையிலும் ஜோதிகா வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"விருது நிகழ்வு மேடையில் ஜோதிகா மேடம் என்ன சொன்னாரோ அதைத்தான் படம் பார்த்த பிறகும் என்னிடம் சொன்னார்.
"அவர் இப்படிச் சொன்னார் என்று சொல்வதற்கே எனக்கு கூச்சமாக இருக்கிறது.
"ஏனென்றால் அது அவ்வளவு பெரிய வார்த்தை.
"அது எனக்கு மட்டுமல்ல, நேர்த்தியாக கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் எல்லோருக்கும் ஊக்கமூட்டுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
"வெறும் நன்றி என்று சொல்லிக் கடந்து போகமுடியாத ஒரு பந்தம்.
"எங்கள் மொத்தக் குழுவிடமும் சூர்யா இவ்வளவு கனிவாக, எளிமையாக இருப்பார் என்று நினைக்கவில்லை.
"இந்தப் படம் குறைந்த நேரத்தில் பலரிடம் சென்று சேர காரணம் படம் மீது அவர்களுக்கு இருந்த அன்புதான்.
"இந்த ஒரு காரணத்துக்காகவே சூர்யா, ஜோதிகா ஆகிய இருவருக்கும் எங்கள் படக்குழு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
"அவர்களுடைய உந்துதலால் நல்ல படங்களைத் தரவேண்டும் எனும் எண்ணம் மனதில் மேலோங்கி நிற்கிறது," என்று தெரிவித்துள்ளார் ஹலிதா ஷமீம்.

