ஊரடங்கு வேளையில் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதில் திரைக்கலைஞர்கள் முனைப்பாக உள்ளனர்.
நடிகர் வடிவேலு கொரோனா குறித்து அண்மையில் ஒரு பாடலை வெளியிட்டார். அதேபோல் நடிகர் கருணாகரனும் கொரோனா குறித்து ஒரு பாடலை எழுதியுள்ளார். நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி ஒருபடி மேலே சென்று கொரோனா குறித்த ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளாராம்.
நடிகை திரிஷா தாம் நடனமாடும் காணொளிப் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங்கும் அப்படியொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லட்சுமி மேனனும் நடனமாடும் காணொளிப் பதிவுகளை வெளியிட விரும்புவதாகத் தகவல்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 'அறிவும் அன்பும்' என்ற தலைப்பில் ஒரு பாடலை வெளியிடுகிறார். இது நம்பிக்கை, நேர்மறைச் சிந்தனை, அன்பு ஆகியவற்றை விவரிக்கும் பாடலாக இருக்கும் என்கிறது கமல் தரப்பு.
இப்பாடலைத் தாமே இயற்றி, பாடவும் செய்துள்ளார் கமல். ஜிப்ரான் இசையமைப்பில் இப்பாடல் உருவாகி உள்ளது. இதற்கான காணொளிப் பதிவு ஒன்றும் வெளியாகி உள்ளது.
இளம் நாயகி நிதி அகர்வால் வீட்டில் சும்மா இல்லாமல் இணையம் வழி திரைப்படம் சார்ந்த படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் நடிப்புப் பயிற்சியுடன் திரைக்கதை வடிவமைப்பு மற்றும் படத்தயாரிப்பு தொடர்பான இணைய வகுப்பில் சேர்ந்துள்ளார்.
தினமும் சில மணி நேரங்களை இதற்காக ஒதுக்கு கிறாராம். ஒவ்வொரு நாளும் திரைத்துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதும், புதிய தகவல்களை அறிந்துகொள்வதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியைத் தருவதாக அவர் கூறுகிறார்.
தமக்கு முன்பாகவே பல்வேறு திரைக் கலைஞர்கள் இந்த அகாடமியில் சேர்ந்து இணையம் வழி பயிற்சி பெற்றுள்ளனர் என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது என்கிறார் நிதி.
நடிகை ராஷ்மிகா தற்போது கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா' என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா. இதில் அல்லு அர்ஜுன் லாரி ஓட்டுநராக நடிக்கிறாராம். சந்தனக் கடத்தலை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது இப்படம்.
இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா. இதையடுத்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக பார்த்து தனது வேடத்துக்காக பயிற்சி எடுத்து வருகிறாராம்.
"ஊரடங்கு முடிவதற்குள் கிராமத்துப் பெண்ணாகவே மாறிவிடுவேன். பழைய படங்களில் அன்றைய கதாநாயகிகள் அவ்வளவு கச்சிதமாக தங்கள் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்," என்று பாராட்டுகிறார் ராஷ்மிகா.
நடிகை சுஜா வாருணி தனது 8 மாத குழந்தை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை வளர்ப்பு என்பதும் தாய்மை என்பதும் சாதாரண விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஊரடங்கு வேளையில் தனது மகன் அத்வைத் உடனிருப்பதால் பொழுதுபோவதே தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
"நிறையப் பேர் குழந்தைக்கு அளிக்கப்படும் உணவு என்ன, எப்படி குழந்தையை வளர்க்கிறீர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்களுக்கெல்லாம் பதிலளித்து வருகிறேன். எங்களைப் போலவே அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று சுஜா வாருணி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தனிமையில் வாடிவந்த தமக்கு கொரோனா கிருமி விவகாரத்தால் அத்தனிமை நீடிப்பது மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.
"நான் தனிமையில் அதிகம் இருந்ததில்லை. பெற்றோர், உறவினர்களுடன்தான் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன். பிறகு கண
வருடன் இருந்தேன். விவாகரத்துக்குப் பிறகு தனியாக வசித்து வருகிறேன். இப்போது ஊரடங்கு காரணமாக கட்டாயத் தனிமை என்பது மனதைப் பாதித்துள்ளது. இதற்காக இணையம் வழி மனநல சிகிச்சை பெற்று வருகிறேன்," என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் ஸ்வேதா பாசு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

