ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே இசைப்பணிகளைக் கவனித்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தாம் பின்பற்றும் ஆறு முக்கியமான விஷயங்களை அண்மைய பேட்டி ஒன்றில் அவர் பட்டியலிட்டுள்ளார்.
"மனநல ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியம். நன்றாகத் தூங்குங்கள், சாப்பிடுங்கள். அதிகம் சாப்பிடாதீர்கள். உங்கள் மனதுதான் முக்கியமான விஷயம். அதைத் தூய்மையாக வைத்திருங்கள்.
"தூய்மையாக, சுகாதாரமாக இருங்கள். வீட்டிலிருந்து வேலை செய்தாலும், அதற்கான உடையை உடுத்துங்கள். "எனது அலுவலகத்தில் இரவில் நான் வேலை செய்யும்போது கூட நான் வீட்டில் அணியும் உடைகளை அணிய மாட்டேன்.
"வீட்டிலேயே இருந்தாலும்கூட வீட்டுக்கும் வேலை செய்யும் பகுதிக்கும் வித்தியாசம் இருப்பது முக்கியம்.
"மேற்சொன்ன விஷயத்தைப் பின்பற்றி வேலை முடிந்ததும் மற்றவர்களிடம் பேசுங்கள். அப்போதுதான் வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும்.
"நான் வேலை செய்யும் இடத்தில் ஊதுவத்தியோ, மெழுகுவர்த்தியோ ஏற்றி வைப்பேன். உள்ளே வருபவர்கள் நல்ல அதிர்வுகளை உணர்வார்கள். அவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.
"நான் பல தொழில்நுட்பங்களை, கருவிகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் இறுதியில் எனது அறிவு என்பது ஒரு கூட்டு உணர்விலிருந்து, எல்லையற்ற ஒரு சக்தியிலிருந்து கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
"நாம் அனைவரும் பல்வேறு விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதற்கு வித்தியாசமான பெயர்களைத் தருகிறோம். ஆனால் அதெல்லாம் குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து தான் வருகிறது," என்கிறார் ரஹ்மான்.