பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளித்தால் சிறு வயதில் எந்தளவு உற்சாகம் ஏற்படுமோ அதேபோன்று உற்சாகத்தை இந்த ஊரடங்கு வேளையில் உணர்வதாக சொல்கிறார் நடிகை இனியா.
அண்மைய பேட்டி ஒன்றில் இது சவாலான சூழல் என்றும் தனிமைப்படுத்துதல் அனைவருக்கும் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைக்கு மாறாக மனிதர்கள் செய்த தவற்றுக்கு இப்படிப்பட்ட பதிலடிகள்தான் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டு இனியேனும் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஓய்வைப் பயன்படுத்தி நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் இனியா. சிறுவயதில் முறைப்படி நடனம் கற்றிருந்தாலும் கூட கடந்த சில ஆண்டுகளாக நடனப்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்தாராம்.
"இப்போது நிறைய நேரமிருப்பதால் மீண்டும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். மற்றபடி நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். என் பள்ளிக்கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசுகிறேன்.
"சமூக வலைத்தளத்தில் நாங்கள் ஒரு குழுவாக இயங்குகிறோம். ஒவ்வொருவரும் இப்போது இருக்கும் சூழ்நிலை, குடும்பம் குறித்த தகவல்கள், பள்ளிக்கால புகைப்படங்கள் எனப் பலவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். அதனால்தான் இந்தச் சோதனையான காலகட்டம்கூட எனக்குப் பிடித்திருக்கிறது," என்கிறார் இனியா.
தமிழில் 'வாகை சூடவா' படத்துக்குப் பிறகு அதற்கு இணையாக இன்னொரு வெற்றிப் படத்தில் நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருப்பதாக குறிப்பிடுபவர், கடந்த மூன்றாண்டுகளாக தமிழில் நடிக்க முடியாமல் போய்விட்டது என வருத்தப்படுகிறார். தற்போது தமிழில் 'கலர்ஸ்' படத்தில் வரலட்சுமியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். நாயகியை மையப்படுத்தும் 'காஃபி' என்ற படத்திலும் நடித்து வருவதாகச் சொல்கிறார். தமிழ், மலையாள வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் கன்னடத்திற்குத் தாவியுள்ளார் இனியா. அங்கு முதல் படத்திலேயே முன்னணி நடிகர் சிவராஜ்குமாருக்கு மனைவியாக நடித்துள்ளார். இனியாவின் இயற்பெயர் சுருதியாம். இயக்குநர் சற்குணம்தான் சினிமாவுக்காக இனியா என்று மாற்றியுள்ளார். ரஜினியுடன் ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது நீண்ட நாள் ஆசையாம்.
"அதேபோல் ஆறு குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதும் எனது கனவு. ஸ்டைலான கவர்ச்சியான கடத்தல் கும்பல் தலைவி, பெரும்பொருட் செலவில் உருவாகும் வரலாற்றுப் படத்தில் ராணி வேடம், அனைத்து வகை நடனங்களும் ஆடக்கூடிய நடனக் கலைஞர் பாத்திரம், அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நடுத்தர குடும்பப் பெண், இருசக்கர வாகனத்தை ஸ்டைலாக ஓட்டும் பந்தய வீராங்கனை, படுநாகரிகமான நகரத்துப்பெண் என்று பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். "இப்படியெல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கொஞ்சம்கூட யோசிக்காமல் சம்மதிப்பேன்," என்று சொல்லும் இனியாவுக்கு கல்லூரியில் படித்தபோதே மனதில் காதல் மலர்ந்ததாம்.
அச்சமயம் மூன்றாண்டுகளாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். எனினும் சில மனக்கசப்புகள் காரணமாக இருவரும் கலந்துபேசி சுமூகமாகப் பிரிந்து விட்டனராம்.
"அழுத்தமான நட்புதான் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. எங்களுக்குள் இருந்த அந்த நட்பே அருமையானதாக இருந்தது. அதனால்தான் அந்த நட்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என இருவரும் பேசி முடிவெடுத்தோம். அண்மையில்தான் அவருக்குத் திருமணம் நடந்தது. மணப்பெண்புகைப்படத்தை அனுப்பி திருமணத்துக்கும் அழைத்திருந்தார். ஆனால், படப்பிடிப்புக் காரணமாக போகமுடியவில்லை," என்கிறார் இனியா.

