கடந்த 22ஆம் தேதி உலக பூமி தினம் சத்தமின்றிக் கடந்து போயுள்ளது. கொரோனா கிருமித்தொற்றுப் பீதியில் உலக மக்கள் இத்தகைய பல விஷயங்களைக் கடந்து போய்விட்டனர்.
எனினும் சில நடிகைகள் பூமி குறித்த அக்கறையில் நல்ல பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இயற்கை கொரோனா கிருமி மூலமாக மனித குலத்துக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார் நடிகை ரகுல் பிரீத்சிங்.
இந்த எச்சரிக்கையை உலக மக்கள் உதாசினப்படுத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"இந்தப் பூமி மிகவும் வியக்கத்தக்க புத்திசாலித்தனம் கொண்டது.
"பூமியிடம் நாம் சரணடைந்து விட்டால் நம் வேர்களைப் பதித்து, கிளை பரப்பி, பரந்து விரிந்து மரங்களைப்போல் வாழ முடியும்.
"அதற்கான நேரம் இப்போது கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று ரகுல் பிரீத்சிங் தெரிவித்துள்ளார்.
நம்மைக் காப்பாற்றும் பூமிக்கு பொறுப்புள்ளவர்களாக நாம் நடந்து கொள்வதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இயற்கைக்குள், அதன் அழகிற்குள் தொலைந்துபோய் நம்மை நாமே கண்டுபிடிக்க வேண்டிய தருணமிது என்கிறார்.
பூமியைச் சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்துக் கொள்வது மிக அவசியம் என்கிறார் தமன்னா.
அதைச் செய்யாமல் போனதால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைத்தான் மனித குலம் தற்போது அனுபவித்து வருவதாக சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
"பூமியைக் காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அண்மைய சில வாரங்களாக நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகள், இழப்புகள் அனைத்தையும் வாழ்நாளின் இறுதி வரை மறக்கவே கூடாது," எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மரங்கள் மீது தீராத, காதல் கொண்டவர் நடிகை மாளவிகா மோகனன். 'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவுக்கு சென்றாராம்.
அங்குள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சில தினங்களைக் கழித்ததுடன் விலங்குகளைப் படம் பிடித்தும் இயற்கை வளங்களை ரசித்துப் பார்த்தும் பொழுதைக் கழித்தாராம்.
"எனது தந்தை சினிமா ஒளிப்பதிவாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் எனக்கும் சிறு வயது முதலே புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மரங்களையும் அதிகமாக நேசிக்கிறேன்.
"எனவேதான் உலக பூமி தினத்தையொட்டி மரங்களின் மீதான என் காதலை வெளிப்படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றைக் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன்," என்கிறார் மாளவிகா.
அந்தப் புகைப்படத்தின் கீழ் 'எங்கெல்லாம் மரங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நான் இருப்பேன். மரங்களைக் கட்டியணைத்தபடி நான் நிற்பதை நீங்கள் பார்க்கலாம்' என்றும் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
இதேபோல் நடிகை இலியானாவும் பெரிய மரம் ஒன்றின் நிழலில் ஊஞ்சல் கட்டி படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
"பூமித்தாயின் செல்லப் பிள்ளையான பெரிய மரம் ஒன்றின் கீழ் இவ்வாறு இளைப்பாறுவது பெரும் நிம்மதியை அளிக்கிறது. நிம்மதி தரும் பூமிக்கு நன்றி," என்று கூறியுள்ளார் இலியானா.
"நாம் இப்போது ஒதுங்கியிருக்கலாம். ஆனால் பூமி நம்மை ஒன்று சேர்க்கிறது. இந்த உலகம் நம் வீடு. தாய் பூமியை நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக குணப்படுத்துவோம்," என்று கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
"ஆங்கிலத்தில் 'இதயம்' (HEART) என்பதற்கும் 'பூமி' (EARTH ) என்பதற்கும் எழுத்துக்கள் ஒரே மாதிரியாகதான் உள்ளன. இதுவே நமக்கு பூமியை காப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்," என்கிறார் 'லிங்கா' புகழ் சோனாக்ஷி சின்ஹா.
இந்தக் கருத்துடன் தாமும் ஒத்துப்போவதாகச் சொல்கிறார் மற்றோர் இந்தித் திரையுலகப் பிரபலமான இஷா குப்தா.
"நம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பது தன்னலம். அடுத்த தலைமுறையினர் குறித்தும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். இந்தப் பூமியை எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் விட்டுச் செல்வது நமது பொறுப்பு என்பதை உணர வேண்டும். பூமியின் இயற்கைத் தன்மை மாறிவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை," என்கிறார் நிக்கி கல்ராணி.

