சுடச் சுடச் செய்திகள்

'எப்போது வெளியானாலும் ‘மாஸ்டர்’ படம் கொண்டாட்டம்தான்'

‘மாஸ்டர்’ படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இவற்றில் எதை நம்புவது, எதை ஒதுக்குவது என்று புரியாமல் ரசிகர்கள் தடுமாறுகின்றனர். 

இந்நிலையில் இப்படம் இணையத் தொழில்நுட்பம் மூலம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுவதை விஜய் தரப்பு மறுத்துள்ளது. ஏற்கெனவே ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ இணையத்தில் நேரடியாக வெளியாவதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

இந்நிலையில் விஜய் படமும் அவ்வாறு வெளியாக இருப்பதாகக் தகவல் கசிந்ததால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

வெளிநாட்டைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்று பெருந்தொகை கொடுத்து ‘மாஸ்டர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் பலர் விஜய் தரப்பைத் தொடர்பு கொண்டனராம். 

இதையடுத்து ‘மாஸ்டர்’ தயாரிப்புத் தரப்புடன் விஜய் தொடர்பு கொண்டு பேசியதாகவும் திரையரங்குகளில்தான் அந்தப் படம்  முதலில் வெளியாகவேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

“நான் ரசிகர்களுக்காகத்தான் படங்களில் நடிக்கிறேன். அவர்களின் உற்சாகம்தான் எனக்கு முக்கியம். திரையரங்குகளில்தான் அந்த உற்சாகத்தை அவர்களால் உணரமுடியும்,” என்று விஜய் கூறியுள்ளாராம். 

இந்நிலையில் எப்போது வெளியானாலும் ‘மாஸ்டர்’ படம் கொண்டாட்டம்தான் என்று அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது அதிரடி காட்சிகளும் சண்டைகளும் நிறைந்த படம் என்றும் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் லோகேஷ் கனகராஜ். அப்போது ‘மாஸ்டர்’ குறித்து அவர் விரிவாகப் பேசினார்.

“ஊரடங்கு முடியும்போதுதான் வெளியீட்டுத் தேதி குறித்து  திட்டமிட இயலும். திரையரங்குகள் மீண்டும் திறக்கும் வரை காத்திருப்போம்.  தவிர, இருபது நாட்களுக்கான தயாரிப்புப் பணிகள் மீதம் உள்ளன. சென்னையில் படப்பிடிப்பு துவங்கியபோது விஜய்யை சார் என்று அழைத்தேன். ஆனால், டெல்லியில் படப்பிடிப்பு முடிந்த பிறகு அண்ணா என்று அழைக்கத் தொடங்கி விட்டேன்,” என்று லோகேஷ் தெரிவித்தார்.

இதற்கிடையே ‘மாஸ்டர்’ படக்குழுவினர் ஊரடங்கு வேளையில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று கற்பனைசெய்து விஜய் ரசிகர் ஒருவர் டுவிட்டரில்  கேலிச் சித்திரம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், மற்ற அனைவரும் பொழுதுபோக்குக்கான விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும், படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் மட்டும்  சமைப்பது போன்றும் சித்தரித்திருந்தார். 

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்  மாளவிகா. “கற்பனையில்கூட பெண்கள் சமையல்தான் செய்து கொண்டிருக்க வேண்டுமா? பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதையடுத்து மற்றொரு ரசிகர் அதே கேலிச் சித்திரத்தில் சமையல் செய்வதற்குப் பதிலாக மாளவிகா புத்தகம் படிப்பது போன்று மாற்றி அமைத்திருந்தார். இதனால் உற்சாகமடைந்த மாளவிகா, “நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதை நான் மிகவும் விரும்புகிறேன்,” என்று பதிலளித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon