சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சில நேற்று தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர்.
விரிவுபடுத்தப்பட்ட கொரோனா பரிசோதனை கொள்கை காரணமாக கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
முன்னதாக, பொண்டி கடற்கரையில் கூடிய மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறியது குறித்து கடும் விமர்சனங்கள் கிளம்பின. எனவே, கடந்த மார்ச் மாதம் அக்கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது, கிருமித்தொற்று சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள நிலையில், சிட்னியில் உள்ள பொண்டி கடற்கரையும் மேலும் இரண்டு கடற்கரைகளும் நேற்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேரைக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் நகரிலும் வரும் வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
அதில் முதலாவதாக உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்குச் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"பல வாரங்களாக வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த மக்களின், மன ஆரோக்கியத்தை இது மேம்படுத்தும்," என்றார் நியூ சவுத் வேல்ஸ் நகரத் தலைவர் கிளடிஸ்.
உடல்நலமில்லாதவர்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவில் 6,723 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 84 பேர் மாண்டனர்.
கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ள மாநில அரசாங்கங்கள், கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்களை
யும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

