பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் இன்று (ஏப்ரல் 30) காலமானார். அவருக்கு வயது 67.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமடைந்தது.
இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
இந்தி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்துலக ரசிகர்களையும் தமது இயல்பான நடிப்பால் கவர்ந்தவர் ரிஷி கபூர்.
'பாபி', 'சாந்தினி' போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தித் திரையுலகின் நட்சத்திர நடிகராக உருவெடுத்தார். மேலும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
நடிகர் இர்ஃபான் கான் நேற்று காலமான நிலையில், ரிஷி கபூரும் காலமானது இந்தித் திரையுலகத்தினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயுடன் போராடி வந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் இயங்குவது, பொது நலன் சார்ந்த விஷயங்களில் தமது கருத்துக்களை தைரியமாகச் சொல்வது என்று ரிஷி கபூர் செயல்பட்டு வந்தார்.

