தனது இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெயில்' படம் குறித்த நல்ல தகவல் ஒன்று விரைவில் வெளியாகும் என இயக்குநர் வசந்தபாலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 'ஜெயில்' படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறையின்போது இப்படம் வெளியீடு காண இருந்தது. எனினும் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் இப்படம் குறித்த நல்ல செய்தி காற்றோடு காற்றாக ரசிகர்களை வந்தடையும் என வசந்தபாலன் கூறியுள்ளார்.
"'ஜெயில்' என்று பெயர் சூட்டியதாலோ என்னவோ இந்தப்படம் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது.
"எட்டுத் திசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.
"இதற்கிடையில் கொரோனா கிருமி வேறு உலகை தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறது. அதன் தாக்கம் குறைந்து வருவதாக வரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.
"சிறைக்குள் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது.
"விரைவில் ஜெயிலைப் பற்றிய நல்ல செய்தி காற்றோடு காற்றாகப் பரவும் என்ற நம்பிக்கையுடன் இந்த நாளைத் திறக்கிறேன்," என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

