படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் அடுத்து வெளிவரும் படங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
இல்லையெனில் ரசிகர்கள் அந்தப் படங்களை மறந்துவிடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
அந்த வகையில் விஜய்யின் 'மாஸ்டர்', சூர்யாவின் 'சூரரைப் போற்று' போன்ற படங்கள் குறித்து சில சுவாரசிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'கோப்ரா' குறித்து அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
விக்ரமைப் பொறுத்தவரை ஒரு படத்தில் நடிப்பதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து விடுகிறார் என்பதே இயக்குநர் முன்வைக்கும் பாராட்டுகளில் முதன்மையானது. இந்தப் படத்தில் ஏழு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார் விக்ரம்.
படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியிலேயே அனைத்துத் தோற்றங்களையும் மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி விட்டனர். இதையடுத்து 'கோப்ரா' குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் ஒரு படத்தின் வெற்றிக்காக தன் உயிரைக்கூட பணயம் வைத்து நடிப்பதாகக் கூறுகிறார் அஜய் ஞானமுத்து.
"ஒரு குறிப்பிட்ட காட்சியில் விக்ரம் சாரை தலைகீழாகத் தொங்கவிட்டு தண்ணீரில் முக்கி முக்கி எடுப்பார்கள். பிறகு சரமாரியாகத் தாக்குவார்கள். இந்தச் சமயத்தில் அவர் மூச்சுவிடக்கூடாது என்பதற்காக வாயை வேறு கட்டித் துன்புறுத்துவார்கள். காட்சி இயல்பாக வரவேண்டும் என்பதற்காக உண்மையாகவே தன் வாயைக் கட்டிவிடச் சொன்னார் விக்ரம். ஆனால் எனக்கோ ரொம்ப பயம். அதனால் மறுத்துவிட்டேன்," என்கிறார் அஜய் ஞானமுத்து.
இதையடுத்து ஒரு டூப் கலைஞரை வைத்து அக்காட்சியைப் படமாக்க முயன்றனராம். ஆனால், அந்தத் துணை நடிகரால் ஒருசில விநாடிகளுக்கு மேல் தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்க முடியவில்லையாம்.
காரணம் தலைகீழாக தண்ணீருக்குள் இறங்கும்போது மூக்கினுள் தண்ணீர் நுழையும். வாயை வேறு கட்டியிருப்பதால் அறவே மூச்சுவிட முடியாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர்.
எனவே காட்சியை வேறுவிதமாக மாற்றி எடுக்கலாமா என்று இவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த விக்ரம் தாமே நடிப்பதாக திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். அஜய் ஞானமுத்துவாலும் மறுக்க முடியவில்லை.
"விக்ரம் சார் முதல் டேக்கிலேயே கச்சிதமாக நடித்துவிட்டார். அடுத்த கட்டத்தைப் படமாக்கியபோது அவருடன் நடித்த துணை நடிகர் சிறு தவறு செய்துவிட்டார். இதைக் குறிப்பிட்டு படத்தொகுப்பின்போது வேறுவிதமாக அத்தவற்றைச் சரிசெய்து விடுகிறேன் என்று விக்ரம் சாரிடம் தெரிவித்தேன்.
"ஒரு தகவலுக்காக இப்படிக் குறிப்பிட்டேனே தவிர அக்காட்சியை மீண்டும் படமாக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விக்ரம் என்னை விடவில்லை," என்று நடந்ததை நினைவுகூருகிறார் அஜய் ஞானமுத்து.
சிறு தவறு நிகழ்ந்துவிட்டதை உணர்ந்த விக்ரம் மீண்டும் அக்காட்சியைப் படமாக்குமாறு கூறிவிட்டாராம். இன்னொரு முறை தலைகீழாகத் தொங்கி நடித்தாராம்.
"மாலைக்குள் அக்காட்சியைப் படமாக்கிவிட்டோம். எந்தத் தவறும் ஏற்படவில்லையே என்பதை பலமுறை கேட்டு உறுதி செய்த பிறகுதான் விக்ரம் சார் அங்கிருந்து கிளம்பினர். ஆனால், அன்று இரவு அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகி விட்டது. அவரது கண்ணுக்கு மேல் இருக்கும் நரம்புகள் சில மொத்தமாக குவிந்துவிட்டன.
"இதற்காக சிகிச்சை பெற்று மறுநாளும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அங்கு அவருக்கு அவ்வப்போது ரத்தக்கொதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது.
"பெரிய நாயகனாக வளர்ந்து ஆளாகிவிட்டபோதும் இந்தளவு துணிச்சலாக அர்ப்பணிப்புடன் நடிப்பவர்கள் வெகு குறைவு. விக்ரம் சாரின் உழைப்பு இந்தப் படத்தை நிச்சயம் தூக்கி நிறுத்தும். அதே போல் இதில் பணியாற்றிய அனைவருமே தங்களுடைய பொறுப்பை உணர்ந்து உரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்.
"நாங்கள் புது விக்ரமை திரையில் காட்ட முயற்சிக்கவில்லை.
"மாறாக இயல்பான கலைஞராகவே அவரைக் காட்சிப்படுத்தி உள்ளோம். ஆனால் அந்த விக்ரமை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்துப் போகும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
ஊரடங்கு முடிவுக்கு வந்த அடுத்த சில தினங்களிலேயே கோப்ரா வெளியீட்டை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

