சுடச் சுடச் செய்திகள்

கதாபாத்திரமே முக்கியம் என்கிறார் சுனு லட்சுமி

இனி எந்தப் படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம் நடிகை சுனு லட்சுமி.

தமிழில் ‘டூரிங் டாக்கீஸ்’, ‘எப்போதும் வென்றான்’, ‘அறம்’ உட்பட ஒரு டஜன் படங்களில் நடித்துள்ளார் இவர். எனினும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பரவலாக இவர் பேசப்படவில்லை.

இது வருத்தம் அளிப்பதாகச் சொல்பவர், ‘அறம்’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்த பிறகும் தனக்குரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என வேதனைப்படுகிறார்.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று தெரியவில்லை. ‘அறம்’ படத்தில் எனது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதன்பிறகும் குறைந்த அளவிலான வாய்ப்புகளே தேடிவந்தன. அதிலும் பலர் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்றுதான் கேட்டனர். அதனால் பல வாய்ப்புகளை ஏற்காமல் புறக்கணித்து விட்டேன்.

“சினிமாவைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமாகி விட்டால் தொடர்ந்து அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டுதான் பலரும் அணுகுவார்கள். நாம் மாற நினைத்தாலும் மற்றவர்கள் நம்மை மாற விடமாட்டார்கள். எனவேதான் இனி அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என்று உறுதியாக முடிவெடுத்துள்ளேன்,” என்று சொல்லும் சுனு லட்சுமி, தற்போது ‘சங்கத்தலைவன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் கருணாஸ் ஜோடியாக நடித்தது குறித்து பலரும் விசாரித்தனராம்.

“ஏன் கதாநாயகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை யாருக்கு ஜோடியாக நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல.

“ஒரு கதையில் நமது கதாபாத்திரத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை மட்டுமே கவனிப்பேன்.

“எனக்குத் திருப்தியளித்தால் நாயகன் யார் என்றுகூட பார்க்கமாட்டேன். அந்த வகையில் ‘சங்கத்தலைவன்’ படத்தில் எனது நடிப்பை வெளிப்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. அதனால் தயக்கமின்றி தேடிவந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

“கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்ப் படங்களில் நடித்து வந்தாலும் நியாயமான சம்பளத்தை மட்டுமே கேட்டுப் பெறுகிறேன். மாறாக இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என்று எப்போதுமே அடம்பிடித்ததில்லை. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது கொள்கையாக உள்ளது,” என்று சொல்லும் சுனு லட்சுமிக்குள் ஓர் இயக்குநரும் ஒளிந்து கொண்டிருக்கிறாராம்.

இவருக்கு மலையாளத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளது. தகுந்த வாய்ப்பு அமைந்தால் ஒரு படத்தை இயக்கத் தயங்கப் போவதில்லை என்கிறார்.

“ஒரு நல்ல கதையை சினிமாவுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் அமைய வேண்டும். அதேபோல் என்னை நம்பி நான் எதிர்பார்க்கும் நடிகர் நடிகைகள் என்னுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்கள் உள்ளன.

“படம் இயக்குவது சாதாரண விஷயமல்ல. ஒருவேளை நான் ஒரு படத்தை இயக்கினாலும் அது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் தான் இருக்கும். அப்படிப்பட்ட கதையைத்தான் தயார் செய்து வைத்துள்ளேன்.

“எனக்கு நன்றாகப் பாடவும் வரும். ஆனால் எந்த இசையமைப்பாளரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை,” என்று சொல்லும் சுனு லட்சுமி தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். தமிழில் புது வாய்ப்புகள் தேடிவருவதால் சென்னையில் குடியேறத் திட்டமிட்டுள்ளாராம்.

“விஜய் ஆண்டனி நடிக்கும் படம் உட்பட வேறு சில படங்களிலும் ஃபிளாஷ்பேக்கில் வரும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டனர். முடியாது என்று அன்பாக மறுத்துவிட்டேன்.

“வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்னைப் பொறுத்தவரை யாரையும் போட்டியாகக் கருதியதில்லை. எனக்கு நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள்தான் போட்டி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்க விரும்புகிறேன்,” என்று சொல்லும் சுனு லட்சுமி தமிழில் சரளமாகப் பேசுகிறார்.

அப்படி இருந்தும் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை என்பதுதான் இவரது வருத்தமாம்.

“என் குரல் இனிமையாக இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். எனக்கு நன்றாகப் பாட வரும் என்று நானும் சொல்லி வருகிறேன். நான் தமிழில் சரளமாகப் பேசுகிறேன் என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை. என்னுடன் ஐந்து நிமிடங்கள் பேசினாலே தெரிந்துவிடும்.

“அப்படி இருந்தும் தமிழில் எனக்கு வேறு ஒருவர்தான் பின்னணிக் குரல் கொடுக்கிறார்,” என்று ஆதங்கப்படுகிறார் சுனு லட்சுமி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon