திரைத் துளிகள் (3-6-2020)

பாடல் போட்டி நடத்தும் நடிகைகள்

நடிகைகள் ஆண்ட்ரியாவும் வரலட்சுமியும் நடன இயக்குநர் ஜெஃப்ரி வர்டானுடன் இணைந்து நிதி திரட்டும் நோக்கத்துடன் போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் திரட்டப்படும் நிதியை வைத்து ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

சுமாராக பாடக் கூடியவர்களும் பாடகராக பெயரெடுக்க விரும்புவோரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டி விதிமுறைப்படி அவர்கள் பாடல்களைப் பாடி அனுப்ப வேண்டும்.

“இது திறமையைக் கண்டறிவதற்கான போட்டிக்குள் நுழைவதற்கான நல்ல வாய்ப்பு. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு நல்ல காரியத்தை செயல்படுத்த இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் திறமையான பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக செயல்படப் போவதும் இவர்தானாம்.

 


தமன்னா ருசித்த காலை உணவு

ஊரடங்கு வேளையில் தனது தாய்மொழியான சிந்தியை கற்று வருகிறார் நடிகை தமன்னா.

இந்த ஓய்வுக் காலத்தில் யோகாசனம் செய்வது குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வப்போது பதிவிடுகிறார். சில அழகு குறிப்புகளும் இடம்பெறுகின்றன.

இதற்கெல்லாம் அவர் வைக்கும் தலைப்புகளும் பயன்படுத்தும் வார்த்தைகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால் அவரது பதிவுகளை ரசிகர்கள் தவற விடுவதில்லை.

இந்நிலையில் காலை பசியாறுவதற்கு பரோட்டா சாப்பிட்டதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். ‘இது சாம்பியன்களின் காலை உணவு’ என்று குறிப்பிட்டு, அந்த பரோட்டாவை சுவையாக தயாரித்தது தனது தாயார் என்றும் அதைச் சாப்பிடுவது பேரின்பம் அளிப்பதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்.