கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு கோடம்பாக்கம் திரும்பியுள்ளார் இளம் நாயகி அனாகா.
தமிழ் ரசிகர்கள் பலர் இவரை மறந்திருக்கக் கூடும். 'ஹிப் ஆப் ஆதி' நடித்த 'நட்பே துணை' படத்தில் நாயகியாக நடித்தவர். அதன்பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு 'குணா 369' என்ற படத்தில் நடித்தார்.
"அது முழுநீளக் காதல் மற்றும் அடிதடி நிறைந்த படம். தமிழைப் போலவே தெலுங்கிலும் எனக்கு நல்ல துவக்கம் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு தெலுங்குப் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் தமிழில் நல்ல வாய்ப்பு கிடைத்ததால் கோடம்பாக்கம் திரும்பி இருக்கிறேன்," என்கிறார் அனாகா.
சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் இவர்தான் அவருக்கு ஜோடி. 'நட்பே துணை'யில் ஹாக்கி வீராங்கனையாக அசத்தியவர், அடுத்து துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் தோன்றுகிறாராம்.
கதைப்படி சந்தானத்தின் காதலி என்றாலும் தவறு நடந்தால், ஒரு செயல் அநியாயம் என்று தோன்றினால் உடனே எதிர்த்துப் போராடுவாராம்.
"'நட்பே துணை'யில் ஜாலியான பெண்ணாக நடித்திருந்தேன். அதன் கதை அமைப்பு அப்படி. ஆனால் 'டிக்கிலோனா'வில் என் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி இருப்பதாக நம்புகிறேன்," என்று சொல்லும் அனாகாவுக்கு வாழ்க்கையில் முன்மாதிரி என்றால் அது தன் தாயார்தான் என்கிறார்.
அது மட்டுமல்ல, வீட்டுக்குள் அம்மா என்றால் வெளி உலகில் இந்தி நடிகை ரேகா என்று சொல்கிறார்.
தன்னைப் பொறுத்தவரை ரேகா ஒரு போராளி என்றும் வாழ்க்கை முழுக்க போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் என்றும் குறிப்பிடுபவர், ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை தனக்குப் பல விஷயங்களை உணர்த்தியிருப்பதாகச் சொல்கிறார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை 'மகாநதி' என்ற தலைப்பில் திரைப்படமாக்கியதைப் போல் நடிகை ரேகாவின் வாழ்க்கையையும் படமாக்கினால் அது பல பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும் போராடும் குணத்தையும் அளிக்கும் என்று சொல்பவர், ரேகா கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
திரையுலகில் முன்னணி நாயகியாக நிலைத்து நின்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது அனாகாவின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. நிறைய சம்பாதித்து பலருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர், நல்ல கதாபாத்திரங்களில் நடித்து விருதுகளையும் பெற விரும்புகிறார்.
யாருடன் நடிக்க விருப்பம் என்று கேட்டால், சிரித்துக்கொண்டே, "கேள்வியை மாற்றி யார் இயக்கத்தில் நடிக்க விருப்பம் என்று கேளுங்கள். அதுதான் பொருத்தமாக இருக்கும்," என்று பதில் வருகிறது.
"இவர்கள் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அந்தளவு பல இயக்குநர்கள் என்னைக் கவர்ந்துள்ளனர். இயக்கம்தான் முக்கியம் என்று வந்துவிட்ட பிறகு யாருடன் நடிக்கிறேன் எனும் கேள்வியே எழாது," என்று கூறும் அனாகா, ஊரடங்கு வேளையில் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது பெற்றோர் இருவருமே ஆசிரியர் பணியில் இருந்தவர்கள். மேலும் இவருடைய குடும்ப வட்டத்தைச் சேர்ந்த பலரும் கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாம். இவருக்கு மட்டும் கலைகள் மீது மிகுந்த ஆர்வம். முறைப்படி கர்நாடக சங்கீதம், மேற்கத்திய நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பட்டப்படிப்பையும் முடித்துவிட்ட பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் சிலகாலம் பணியாற்றி உள்ளார்.
"பிறகு என் மனதில் உள்ள சினிமா ஆசையை வெளிப்படுத்தினேன். வீட்டில் உடனே அனுமதி கொடுத்ததை எதிர்பார்க்கவில்லை. நடிப்புத் தொழில் நிரந்தரமில்லை என்பதால்தான் பட்டப்படிப்பை முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்பது புரிந்தது. இப்போதும்கூட சினிமா வாய்ப்பு இல்லையென்றாலும் ஒருவேலையில் சேர்ந்து சொந்தக்காலில் நிற்க முடியும்," என்கிறார் அனாகா.

