'அம்மன்' வேடத்திற்காக நயன்தாரா விரதம்

மூக்குத்தி அம்மன் ’ படப்பிடிப்பை த் திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே முடித்துவிட்டதாகச் சொல்கிறார் அதன் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.ஜே . பாலாஜி.
தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக யாருமே அம்மன் படம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டுபவர் , தான் நினைத்ததைவிட ‘மூக்குத்தி அம்மன் ’
சிறப்பாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்.

நயன்தாரா அம்மன் அவதாரம் எடுக்கும் முதல் படம் இது. அவருடன் மோதும்வில்லனாக அஜய் கோஷ் நடித்துள்ளார். அம்மன் படத்தில் இடம்பெறும் வில்லன் எப்படி இருக்க வேண்டும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அதை அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளாராம் அஜய் கோஷ் .
கடந்த 40, 50 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் தயாராகும் அம்மன் படங்களில் நிச்சயம் பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் ஒலிக்கும். இந்தப் படத்திலும் அவர் பாடியுள்ளாராம். அம்மன் புண்ணியத்தில் படம் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார் ஆர்.ஜே .பாலாஜி.

இப்படத்தின் கதையை முதன்முறையாக கேட்டபோதே நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துப் போனதாம். உடனடியாக ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.
“சாமி படம் எடுக்கப் போகிறோம். எனவே எல்லாம் சுத்தபத்தமாக இருக்கவேண்டும். அனைவரும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,”
என்று அவரே முன்வந்து சொன்னாராம்.

“படக்குழுவில் இருந்த மற்றவர்களும்  இதே மனநிலையில்தான் இருந்தோம். அதனால் நயன்தாராவின் நிபந்தனை அனைவருக்கும் பிடித்திருந்தது.

“நயன்தாராவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால் இறுதிவரை அர்ப்பணிப்புடன் இருப்பார். அவரது ஈடுபாட்டைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அதே மனநிலை வந்துவிடும்.

“பொதுவாக காலை யில் படப்பிடிப்புக்கு வந்தார் என்றால் முதல் காட்சி படமாக்கப்படும்வரை பசியாறக்கூட மாட்டார். அதுதான் அவரது வழக்கம்.
இந்தப் படத்துக்காக இன்னும் ஒருபடி மேலே சென்று படம் முடியும்வரை சைவமாக மாறிவிட்டார்,” என்று நயன்தாரா புகழ் பாடுகிறார் ஆர்.ஜே .பாலாஜி.