'குவீன்' இணையத்தொடர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அல்ல என்று மீண்டும் கூறியுள்ளார் அத்தொடரின் நாயகி ரம்யா கிருஷ்ணன்.
நடிகையாக இருந்து பெரிய அரசியல் தலைவியாக உயரும் ஒரு பெண்ணின் கதைதானாம் 'குவீன்'.
ஆனால், இதற்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை என்று படக்குழுவினர் கூறுவதை பலரும் இதுவரை சந்தேகக் கண்ணுடன்தான் பார்க்கிறார்கள்.
இத்தொடரில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரத்துக்கான ஒப்பனையில் அவரைப் பார்க்கும்போது ஜெயலலிதாதான் நினைவுக்கு வருகிறார்.
"நீங்கள் வேண்டுமானால் அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். இதைத்தான் இயக்குநர் கௌதம் மேனனும் என்னிடம் சொன்னர். இது அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்திலிருந்து உருவாகும் தொடர்.
"ஜெயலலிதாவின் கதையைப் போல் இருந்ததால் எனக்குப் பிடித்துப்போனது.
"ஜெயலலிதாவின் துணிச்சலும் உண்மையாகவே ராணியைப்போல் அவர் இருந்ததும் எனக்கு எப்போ தும் பிடிக்கும்," என்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
இத்தொடருக்கான வசனங்கள் மிகவும் வலிமையாக, அற்புதமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில வசனங்கள் தம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாகச் சொல்கிறார்.
இந்த இணையத்தொடரின் முதல் பாகத்தில் கதாநாயகி நடிகையாக உருவெடுத்த பின்னர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனவாம். குவீன் இரண்டாம் பாகத்தில்தான் அரசியல் களத்தில் நுழையும் காட்சிகள் இடம்பெறுமாம். அதற்கான படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.
"தற்போது நிலவும் கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. கடைசியாக நான் கதாசிரியர் ரேஷ்மாவுடன் பேசியபோது அவர் திரைக்கதையை முடித்திருந்தார். படப்பிடிப்புக்குச் செல்ல அனைத்தும் தயார். ஆனால் இந்த ஊரடங்கைப் பொறுத்துதான் படப்பிடிப் பின் நிலை உள்ளது.
"இதில் இயக்குநர் கவுதம் மேனன் சொன்னபடி நான் நடித்தேன். என் இயல்புக்கேற்ப நடிக்குமாறு சொன்னார். அதைத்தான் செய்திருக்கிறேன். இரண்டாம் பகுதியில் பல்வேறு அதிரடிக் காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
"இந்தத் தொடர் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்," என்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

