இணையத்தில் வெளியாகிறது கீர்த்தியின் 'பெண்குயின்'

2 mins read
c9421fbc-e28b-4a14-acc8-3bcb33ef49bb
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' படம் 'ஒடிடி' தளங்களில் ஜூன் 19ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது.படம்: ஊடகம் -

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' படம் திரை அரங்குகளுக்குப் பதிலாக 'ஒடிடி' தளங்களில் ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று நேரடியாக வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. இந்த நோயினால் தற்பொழுது 50க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்து திரை அரங்குகளைத் திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஓர் இருக்கையை காலியாக வைத்து நுழைவுச் சீட்டு விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் முன்புபோல் இருக்காது என்று கூறப்படுகிறது.

அதனால் படங்களை 'ஓடிடி' தளங்களில் நேரடியாக வெளியிட பல தயாரிப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி தொலைக்காட்சியில் நாடகங்களைப் பார்க்கும் மக்களை ஈர்த்து சந்தாதாரர்களாக இணைக்கும் வேளையில் முன்னணி 'ஓடிடி' தளங்களான 'நெட்பிளிக்ஸ்', 'அமேசான்', 'ஹாட்ஸ்டார்' போன்ற இணைய தளங்கள் இறங்கியுள்ளன.

அண்மையில் ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' படம் 'ஓடிடி'யில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'பெண்குயின்' படத்தையும் இம்மாதம் 19ஆம் தேதி 'ஓடிடி' தளங்களில் வெளியிட இருக்கின்றனர்.

இந்தப் படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால், படத்தின் முன்னோட்டக் குறுங்காட்சியை பல்வேறு திரை நட்சத்திரங்களான திரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்சி ஆகியோர் வெளியிடுவார்கள் என்ற அறிவிப்பை கீர்த்தி சுரேஷ் முன்பு கூறியிருந்தார்.

அதன்படி நேற்று நான்கு முன்னணி நடிகைகளும் ஒன்றுசேர்ந்து இந்த முன்னோட்ட குறுங்காட்சியை வெளியிட்டுள்ளனர். 1 நிமிடம் 19 விநாடிகள் நீளம் கொண்ட இந்த குறுங்காட்சியில் வசனமின்றி காட்சிகளே இடம் பெற்றுள்ளன. இம்மாதம் 11ஆம் தேதியன்று படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழு வெளியிட இருக்கிறது.

இந்தப் படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி இருக்கிறார். இசை சந்தோஷ் நாராயணனும் ஒளிப்பதிவை கார்த்திக் பழனியும் செய்துள்ளனர்.

நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: 'ஓடிடி'யில் வெளியான ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' படம் நல்ல வசூலைத் தரவில்லை என்றும் அதற்குக் காரணம் அவர் தஞ்சைக் கோயிலைப் பற்றி பேசியதால்தான் என்றும் கூறுகின்றனர். ஆனால் கீர்த்தி எந்த வம்பிலும் மாட்டாதவர் என்பதால் படத்திற்கு 'ஓடிடி'யில் நல்ல வரவேற்பு இருக்கும் என்கின்றது கோடம்பாக்கம்.