பிரியா வாரியார்: ரசிகர்களுடன் இணையத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது

பிரியா வாரியார்: ரசிகர்களுடன் இணையத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது

3 mins read
afa47d6f-c36b-45d3-9a12-daeadac6f79b
ரசிகர்களுடன் சமூக ஊடகங்கள் வழி தொடர்பில் இருக்கிறேன். இந்த ஊரடங்கு நேரத்தில் இதுவே எனக்கு மகிழ்ச்சி தருகிறது என உற்சாகத்துடன் கூறுகிறார் பிரியா வாரியார். படம்: ஊடகம் -

தனது கவனம் முழுவதும் சினிமா துறையில்தான் இருக்கிறது என்கிறார் நடிகை பிரியா வாரியர்.

சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்பதுதான் தமது ஆசையாக இருந்தது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத்தில் அறிமுகமானவர் என்றாலும் பிரியாவுக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவும் கணிசமாக உள்ளது.

"எனக்கு இத்தனை தமிழ் ரசிகர்கள் கிடைத்திருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடிய விரைவில் நான் நடித்த நேரடித் தமிழ்ப் படம் வெளியாகும்," என்று சொல்பவருக்கு தமிழில் விஜய் சேதுபதிதான் பிடித்த நடிகராம். அவர் நடித்த '96' படத்தைப் பலமுறை பார்த்துவிட்டாராம்.

தமிழ்ப் படம் ஒன்றில் பிரியா ஒப்பந்தமாகி இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

பின்னர் அது விஜய் சேதுபதியின் படம் என்றும் லேசாக கிசுகிசுக்கப்பட்டது. எனினும் பிரியா தரப்பு அதை இன்னும் உறுதி செய்யவில்லை.

மலையாளப் படத்தில் கண்ணடிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்ட பிரியாவுக்கு இப்போதெல்லாம் கண்ணடிப்பது என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதாம்.

"எங்கு சென்றாலும் முதலில் கண்ணடிக்குமாறுதான் கேட்கிறார்கள். இப்படிச் செய்து போரடித்து விட்டது. அதனால் யார் கேட்டாலும் விளையாட்டாகக் கூட கண்ணடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன்.

"அடிப்படையில் நான் ஒரு நடிகை. எனவே என்னிடம் இருந்து வித்தியாசமான நடிப்பை எதிர்பார்த்தால் அதுதான் சரியாக இருக்கும். தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன். எனவே கண்ணடிக்க நிர்ப்பந்திக்காமல் என்னை நடிக்கவிட வேண்டும் என்பதுதான் எனது அன்பான கோரிக்கை," என்று கண்ணடித்துச் சிரிக்கிறார் பிரியா.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த இவரை இன்ஸ்டகிராமில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்தனர். ஆனால் திடீரென இத்தகைய ஊடகங்கள் ரொம்ப மோசம் என புகார் எழுப்பி இன்ஸ்டகிராமில் இருந்து வெளியேறினார்.

பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. மீண்டும் அதில் இணைந்துள்ளார். இந்த ஊரடங்கு நேரத்தில் பிரியா நடனமாடும் காணொளிப் பதிவுகளும் புகைப்படங்களும் இன்ஸ்டகிராமில் தொடர்ந்து வெளியாகின்றன.

தனக்கு விமர்சனங்களைத் தாங்கும் சக்தி அதிகம் இருப்பதாகக் குறிப்பிடுபவர், அண்மைய காலமாக விமர்சனம் என்ற பெயரில் பலர் எல்லை மீறுவதாக வருத்தப்படுகிறார்.

நேர்மறையான விமர்சனங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் முன்னேற்றம் காணவும் கைகொடுக்கும் என்பதே இவரது எண்ணமாம். ஆனால், எதிர்மறை விமர்சனம் செய்வதற்கென்றே ஒரு குழு இருப்பதாகவும் அந்தக் குழுவினர் தனிப்பட்ட வகையில் தம்மை மிக மோசமாக விமர்சித்ததாகவும் புலம்புகிறார்.

இந்தக் காரணத்தினால்தான் இன்ஸ்டகிராமை விட்டு வெளியேறினாராம்.

"உடனே மலிவான விளம்பரத்துக்காக நான் இவ்வாறு செய்வதாகவும் சிலர் விமர்சனங்களைத் தொடர்ந்தனர். அதைப் பார்த்தபோது இன்னும் வருத்தமாக இருந்தது.

"ஊரடங்கால் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம். பலர் மிகவும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும். படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று பலவற்றை யோசித்துக் கொண்டிருக்கும்போது விளம்பரத்துக்காக எல்லாம் செய்கிறேன் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

"எல்லோருமே மனிதர்கள்தான். அதை மனதில் வைத்துக்கொண்டு பிறரை விமர்சிக்க வேண்டும் விரக்தியின் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி நிற்க முடிவெடுத்தேன்.

"இப்போது நல்ல ரசிகர்களுக்காக என் முடிவை மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணையம் வழி தொடர்பில் இருக்கிறேன். ரசிகர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

"என்னைப் பொறுத்தவரையில் ஆக்கபூர்வமான விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன். அதன் மூலம் ஒருசிலரேனும் பலன் அடைவார்கள் என நம்புகிறேன்.

"எதிர்மறை விமர்சனங்களையும் சமுதாய நலனுக்கு எதிரான விஷயங்களையும் கண்டு கொள்ளப் போவதில்லை. அவற்றை அறவே புறக்கணிப்பேன். இதுவே எனது முடிவு," என்கிறார் பிரியா வாரியார்.