இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்தை தழுவியதுடன் தனது பெயரையும் அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து அடுத்த ஆண்டே ஷாஃப்ரூன் நிஷாவுடன் அவருக்கு திருமணமானது. யுவன் மனைவி நிஷா ஆடை வடிவமைப்பாளர். அவரது நெருக்கமான தோழிகளில் ஒருவரான ரம்ஜான் பீவி என்பவர் மூலமாகத்தான் யுவனின் நட்பு கிடைத்ததாம்.
அண்மையில் இன்ஸ்டகிராம் மூலம் ரசிகர்களுடன் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா உரையாடினார். அப்போது யுவனின் மதமாற்றம் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் தெளிவாக பதிலளித்து இருந்தார். மேலும் பல்வேறு கேள்விகளுக்கு யுவன் அளித்த பதில்களைக் காணொளிப் பதிவாகவும் நிஷா வெளியிட்டார்.
"என் தோழி ரம்ஜான் பீவியிடம் தனக்கேற்ற ஒரு பெண்ணைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார் யுவன். பீவி மூலம் நான் துபாய், மலேசியா என சில நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறேன்.
"பீவிதான் என்னையும் யுவனையும் இணைத்தார். திருமண யோசனையையும் முன்வைத்தார். என்னைத் திருமணம் செய்வதற்காகவே யுவன் மதம் மாறியதாக சிலர் கூறுவது சரியல்ல.
"நம் நாட்டில் திருமணத்துக்காகவும், பொருள்சார் காரணங்களுக்காகவுமே எல்லோரும் மதம் மாறுவதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும்விட நம்பிக்கைதான் முக்கியம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
"நம்பிக்கையைத் திணிக்க முடியாது. அப்படித் திணிக்கப்பட்டால் அது நம்பிக்கையே கிடையாது. மாறாக, கட்டாயப்படுத்தப்பட்ட அடக்குமுறையாகிவிடும்," என்று ஷாஃப்ரூன் நிஷா தெரிவித்துள்ளார்.
தனக்கும் யுவனுக்குமான திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது என்றும் திருமணம் தொடர்பாக சில அனுமானங்கள், குழப்பங்கள் தலைதூக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிஷாவின் தாயார், பெரியப்பா, பெரியம்மா ஆகிய மூவரையும் யுவன் சந்திக்க தோழி பீவி ஏற்பாடு செய்தாராம். அந்தச் சந்திப்பின்போது மூவருக்கும் ஒரு நல்ல மனிதர் என்ற வகையில் யுவனைப் பிடித்திருந்ததாம். அதனால்தான் திருமணம் நிச்சயமானது என்று நிஷா குறிப்பிட்டுள்ளார்.

