ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் மன்ற உறுப்பினர்களும் கொரோனா நோய்த்தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் மனமார்ந்த பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி.
"இப்போதைக்கு இது தீராதுபோல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளைத் தரும்.
"உங்களது குடும்பத்தாரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை.
"எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. அதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்," என்று அதில் தெரிவித்துள்ளார்.

