பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'.
தமிழில் 'காடன்' என்ற தலைப்பிலும் இந்தியில் 'ஹாத்தி மேர சாத்தி' என்றும் தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தனக்கு கடும் சவாலைக் கொடுத்தது என்று நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.
"நான் நடித்த 'பாகுபலி' படம் என் வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை. அது இந்திய சினிமாவையே மாற்றியது. ஹாலிவுட்டில் 'ஸ்டார் வார்ஸ்' படங்கள் செய்த மாற்றத்திற்கு இணையாக அமைந்தது 'பாகுபலி' படம்.
"பாகுபலி' படத்தில் நான் காடுகளில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் 'காடன்' படத்திற்காக கிட்டத்தட்ட 200 நாட்கள் காடுகளில் படப்
பிடிப்பு நடந்தது. இந்தப் படம் எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது.
"பாகுபலி'யில் நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு உடல் ரீதியான சிரமத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் 'காடன்' அதைவிட கடினமாக இருந்தது. உடல் உழைப்பு அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது.
"இந்தப் படத்தில் யானையின் தும்பிக்கையை என் தோளில் தாங்க வேண்டியிருந்தது. அது கிட்டத்தட்ட 160-170 கிலோ எடை கொண்டது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தாலும் ஒவ்வொரு படமும் எனக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது.
"மேலும் இந்தப் படத்தில் நடித்த யானை உன்னியின் நடிப்பு அபாரம். தாய்லாந்தில் சில காட்சிகளைப் படம் பிடித்தோம். அங்குள்ள யானைகளைவிட யானை உன்னி மிகவும் சிறப்பாக எங்களில் ஒருவர்போல பணியாற்றியது. அதனோடு நடந்த படப்
பிடிப்புகள் என்னால் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகளாக என்றும் என் மனதில் இருக்கும்.
"படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் முரட்டுத் தனமாக இருக்கும்.
ஆனால் நடிகர் விஷ்ணு விஷாலின் கதையில் காதல், நகைச்சுவைகள் கலந்து இருக்கும்," என்று கூறினார் ராணா.
இதற்கிடையே நடிகர் ராணா மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருகிறார். இரண்டு குடும்பங்களும் கலந்துகொண்ட படத்தை ராணா வலைத்தளத்தில் பதிவிட்டார்.
படம் வெளியான சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதனைப் பார்த்த பலரும் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நினைத்தனர்.
நடிகர் நானி அவரிடம் நிச்சயம் முடிந்துவிட்டதா என்று கேட்க, அதற்கு ராணா "இது திருமணத்திற்கு முன்பாக இரு குடும்பமும் சேர்ந்து பரிசுப் பொருட்களையும் அன்பையும் பரிமாறிக் கொள்ளும் 'ரோகா' நிகழ்ச்சி என்றும் நிச்சயதார்த்தம் இல்லை என்றும்," அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதை ராணாவின் தந்தை சுரேஷ்பாபு உறுதிப்
படுத்தி உள்ளார்.
கொரோனாவால் திருமணத்தை ஆடம்பரமாக செய்யாமல் சில உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாகக் கூறினார் ராணா.

