'ஆதித்யா' தொலைக்காட்சியின் `மொக்கை ஆஃப் தி டே' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லோகேஷ், `நானும் ரெளடிதான்', `ஜாம்பி' எனப் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முதல் அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு, தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
அவர் உடல்நலம் பற்றி கூறுகையில், "நண்பர்களோடு வெளியில் சென்றுவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பினேன். அதுவரைக்கும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வீட்டிற்கு வந்த பிறகு கைத்தொலைபேசியை எடுக்கும்போது சரியாகப் பிடிக்க முடியாமல் கீழே விழுந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் படுத்துவிட்டேன்.
"காலையில் எழுந்தபோதுதான் இடது காலும் கையும் செயல் இழந்து போனது தெரியவந்தது. எனக்கு இரத்த அழுத்தம் இருந்திருக்கிறது. இது எனக்கு அதுவரை தெரியாது.
"அதன்பிறகு அறுவை சிகிச்சை முடிந்து 10 நாள் வரையும் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. என் மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டதால் மண்டை ஓட்டை வெட்டி அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார்கள். அந்த ஓட்டை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் மண்டையில் வைக்கவேண்டும். அதனால்தான் நான் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறேன்.
"மருத்துவ செலவுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆதித்யா தொலைக்காட்சி நிர்வாகம், நண்பர்கள் உதவி செய்தார்கள். என்னைப் பார்க்க சோகமாக வந்த விஜய் சேதுபதி அண்ணாவை நான் சிரிக்க வைத்து அனுப்பினேன்.
"இந்தச் சம்பவத்தில் இருந்து நான் கத்துக்கொண்ட விஷயம் என்னவென்றால் நம் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை என்று புரிய வைத்தது.
"முதல் நாள் இரவு கைகள் தொலைபேசியை பிடிக்க முடியாமல் போனபோதே நான் சுதாரித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் இந்த அளவிற்கு ஆகியிருக்காது. அனைவரும் அவரவர் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் அமைதியாக இருந்து மனிதரை சாய்த்துவிடும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும்," என்றார் லோகேஷ்.

