'கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள 'பென்குயின்' படம், இம்மாதம் 19ஆம் தேதி, இணையம் மூலம் வெளியாகிறது. இயக்குநர் இதுவரை எந்த இயக்குநரிடமும் பணியாற்றியதில்லை. அதுபோல் குறும்படம் உள்ளிட்ட எந்தப்படமும் இயக்கியதும் இல்லை. அந்த வகையில், 'பெண்குயின்' படம் இயக்குநருக்கு முதல் படம் என்றே சொல்லாம்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, "பெண்குயின்' நாயகிக்கான கதையாகத்தான் எழுதினேன். சாதாரண பெண். அசாதாரண சூழலில் சிக்கினால், என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை. கதையைக் கேட்டதுமே கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொண்டார். தாய், மகன் பாசம்தான் கதையின் உயிர். படப்பிடிப்பு முடியும் வரை, முகமூடி மனிதர் யார் என்பது குறித்து, படக்குழுவினருக்கு கூட தெரியாது.
"கார்த்திகேயன் சந்தானம் கதையைக் கேட்ட பிறகு, உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார். விஜய் சேதுபதி, கார்த்திகேயன் சந்தானம் இருவருமே என் திரையுலக வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவர்கள். எந்தவொரு அனுபவமும் இல்லாமல் வருபவரை நம்புவதற்கு, ஒரு தைரியம் வேண்டும். அது இவர்களுக்கு இருக்கிறது," என்றார்.
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், "தங்கச்சி முன்னோட்டக் காட்சி சிறப்பு. நடிப்பு அதைவிட சிறப்பு. அடுத்த
விருதுக்கு தயாராகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்," என்று பதிவிட்டு இருக்கிறார். அதற்கு கீர்த்தி சுரேஷ், "அண்ணா மிக மிக நன்றி," என்று பதிவிட்டு இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் 'சாவித்திரி' படத்தில் தத்ரூபமாக நடித்ததற்கு பல விருதுகளை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

