சினிமா என்னை விடவில்லை என்கிறார் ரெஜினா.

3 mins read
0641c206-4237-4f79-81d6-41dde8b99307
ரெஜினா -

ரெஜினா நடிகையாகி விட்டதால் ஒரு நல்ல மனநல மருத்துவரை நாம் இழந்துவிட்டோம். சிறுவயதில் மருத்துவராக வேண்டும் என்பதுதான் இவரது கனவாம். ஆனால், காலம் இவரை நடிகையாக நம் கண்முன் நிறுத்தி இருக்கிறது.

"ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மருத்துவராக வேண்டும் என்பது மட்டுமே எனது கனவாக இருந்தது. அதிலும் ராணுவத்தில் சேர்ந்து மருத்துவராகப் பணியாற்ற விரும்பினேன்.

"ஆனால் நான் நினைத்தது போல் அது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்பதை என் அம்மா புரிய வைத்தார்.

"மருத்துவராகவும் பின்னர் மருத்துவராகப் பணியாற்றவும் நிறைய உழைக்கவேண்டும் என்று அவர் சொன்னபோது அதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள பல புத்தகங்களைப் படித்தேன். அப்போதுதான் மருத்துவ உலகம் குறித்தும் மருத்துவர்களின் மனநிலை குறித்தும் புரிந்துகொண்டேன்.

"மக்கள் மருத்துவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதும் தெரிந்தது. அவர்களைப்போல் உழைப்பது சுலபமல்ல என்பது நன்றாகத் தெரிந்தது" என்கிறார் ரெஜினா.

அதன்பிறகுதான் மக்களின் உளவியல் ரீதியான விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டானதாம். இதையடுத்து கல்லூரியில் மனநலம் குறித்த படிப்பை மேற்கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மனநல மருத்துவராக வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் நுழையும் வாய்ப்புக் கிடைக்க மனநல மருத்துவராக வேண்டும் எனும் ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டாராம்.

"சினிமாவில் நடிக்கத் துவங்கிய பிறகும்கூட நான்கைந்து வருடங்கள் நடித்துப் பார்ப்போம். ஒத்துவரவில்லை என்றால் மனநல படிப்பைத் தொடர்வோம் என்றுதான் நினைத்தேன். ஆனால், சினிமா என்னை விடவில்லை," என்கிறார் ரெஜினா.

தற்போது அரவிந்த்சாமியுடன் 'கள்ளபார்ட்', வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', சிம்புதேவனின் 'கசடதபற', கார்த்திக் ராஜுவின் 'சூர்ப்பனகை' என்று இவரது கால்ஷீட் புத்தகம் நிரம்பிக் கிடக்கிறது. தெலுங்கிலும் மூன்று படங்களில் நடித்து வருகிறாராம்.

"அண்மைக் காலமாக நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை ஒப்புக்கொள்வது ஏன் என்று எனக்கு நெருக்கமானவர்களே ஏதோ தவறு செய்துவிட்டதுபோல் விசாரிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது நல்ல விஷயம்.

"ஒரு படத்தின் கதையும் அதில் எனக்கான கதாபாத்திரமும்தான் முக்கியம். ஐந்து நிமிடங்கள் திரையில் தோன்றினாலும் என்னால் ரசிகர்களைக் கவரமுடியும் என நம்புகிறேன். ஒரு நல்ல படத்தில் நாமும் இருந்தால் அது போதும் என்று நினைக்கிறேன்," என்று சொல்லும் ரெஜினாவை 'நம்ம சென்னைப் பெண்' என்று தயங்காமல் குறிப்பிடலாம்.

காரணம், பள்ளி, கல்லூரிப் படிப்பு என்று சென்னையில்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறார். ஆனாலும், சென்னைத் தமிழில் பேசவராதாம்.

"வீட்டில் ஆங்கிலத்தில்தான் பேசுவோம். தற்போது ஹைதராபாத்தில் குடியேறி விட்டதால், சென்னையைப் பற்றிய ஏக்கம் எப்போதுமே மனதில் இருக்கிறது. சென்னையின் வெதுவெதுப்பான காலச் சூழ்நிலை, சென்னையில் கிடைக்கும் தோசை, மெரினா கடற்கரை, சென்னை அருகே உள்ள மகாபலிபுரம் ஆகியவையும் என் ஏக்கத்தை அதிகப்படுத்துகின்றன," என்கிறார் ரெஜினா.

உங்களுக்கு ஒப்பனையில் ஆர்வம் அதிகம் என்று கூறப்படுகிறதே?

"திரையில் தோன்றும் போது என் ரசிகர்களைக் கவரும் வகையில் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு ஒப்பனையும் நவீன முக அலங்காரப் பொருட்களையும் பயன்படுத்துகிறேன்.

"இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக எல்லா நடிகைகளும் இப்படித்தான் செய்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி ஒப்பனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை," என்கிறார் ரெஜினா.