சத்தமின்றி 23 படங்களில் நடித்து முடித்திருக்கிறார் அதிதி ராவ். தற்போது ஹைதராபாத்தில் வசிப்பவர், கொரோனா ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என ஆவலாக காத்துக் கிடக்கிறாராம்.
அண்மைய பேட்டி ஒன்றில் பல்வேறு மொழிப் படங்களில் நடித்த அனுபவங்கள், மணிரத்னம் உள்ளிட்ட பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்ததன் மூலம் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து விவரித்துள்ளார் அதிதி.
"இவர்களது படங்களில் நடிக்கும்போது படக்குழுவில் எந்தவிதமான ஏற்றத் தாழ்வுகளும் இருக்காது. படக்குழுவில் நாமும் ஒருவர், அவ்வளவுதான். நமக்கும் ஒரு வேலையைத் தந்திருப்பதால் அங்கு இருக்கிறோம். குறிப்பிட்ட கதைக்கு அல்லது காட்சிக்கு நாம் தேவைப்படுகிறோம். மாறாக நாம் நம்மை மட்டுமே தனித்து அடையாளம் காண முடியாது," என்கிறார் அதிதி ராவ்.
சில இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும் போது படக்குழுவினர் ஒரே குறிக்கோளுடன் வேறு எதுகுறித்தும் யோசிக்காமல் வெறித்தனமாக பணியாற்றுவதைக் கண்டு பிரமித்துப் போயிருப்பதாக குறிப்பிடுபவர், தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த அனுபவத்தை எந்நாளும் மறக்க இயலாது என்கிறார். "பல்வேறு இந்திய மொழிகளில் நடிப்பதன் மூலம் இந்திய நடிகை என்று பெயரெடுக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு தென்னிந்திய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒரு நடிகை என்ற வகையில் ஒரு கதையைக் கேட்கும் போது அது என்ன மாதிரியான உணர்வை என்னுள் ஏற்படுத்துகிறது என்பதையே முக்கியமாக கருதுகிறேன். ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியேறும்போது முரண்பட்ட ஒரு கருத்து மனதில் ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது திருப்தியாக உணர வேண்டும். ஓர் இயக்குநரோ கதாபாத்திரமோ அத்தகைய உணர்வை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். உண்மையில் இத்தகைய படங்களில் தான் நடிப்பேன் என்று நான் எந்தவிதமான நிபந்தனையும் விதிப்பதில்லை. வணிகப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறேன்," என்கிறார் அதிதி ராவ்.
ஊரடங்கு வேளையில் எப்படி பொழுது போக்குகிறீர்கள்?
"நிறைய யோசிக்கிறேன். ஒரு நடிகையாக எனக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது. அதை நினைத்து திருப்தி அடைகிறேன். எனினும் சில சமயங்களில் எனக்கும் கவலை ஏற்படும். அப்போதெல்லாம், 'உனக்கு என்ன பிரச்சினை... உனக்குதான் எல்லாம் இருக்கிறதே' என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.
"ஆனால் திருப்தியுடனும் நன்றியுடனும் இருப்பதையும் மீறி நமக்கென சில கடமைகள் காத்திருக்கின்றன. நம்முடைய பணம், நேரம், உழைப்பு, முயற்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே செலுத்தி ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்," என்று சொல்லும் அதிதி ராவ், தற்போது மலையாளத்தில் 'சுஃபியும் சுஜாதாயும்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரை காண்கிறது.

