நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் சம்பவங்கள் திரையுலகில் நடப்பதாக நடிகை தேஜஸ்வி கூறியுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர், தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தமிழில் 'நட்பதிகாரம் 79' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விமலுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாகத் தகவல்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களின் ஆசைக்கு இணங்குவதாலேயே மும்பை நடிகைகளுக்குப் படவாய்ப்புகள் அதிகளவில் கிடைப்பதாக கூறியுள்ளார் தேஜஸ்வி. அவரது இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
"நானும்கூட நடிக்க வந்த புதிதில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டேன். சிலரது பாலியல் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் திரையுலகை விட்டே விலக நினைத்தேன்.
"என்னைப் போல் பல நடிகைகள் இத்தகைய தொல்லைகளை எதிர்கொண்டுள்ளனர்," என்கிறார் தேஜஸ்வி.
தென்னிந்திய நடிகைகள் நீச்சல் உடை, முத்தக் காட்சிகளில் நடிக்க மிகவும் கூச்சப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லைகள் இருப்பதாக கூறியுள்ளார்.
"சில மும்பை நடிகைகள் இத்தகைய தொல்லைகள் குறித்து கவலைப்படுவதில்லை.
"படவாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக மனரீதியில் இதற்கு உடன்படத் தயாராகி விடுகிறார்கள். இதனால்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
"சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்கள் அதற்குச் சம்மதிப்பதில்லை," என்று வெளிப்படையாகப் பேசுகிறார் தேஜஸ்வி.
திரையுலகில் நிலவும் பாலியல் சீண்டல்கள் காரணமாக இவரது காதல் கைகூடாமல் போனதாம். இன்றளவும் தமக்கு அந்த வருத்தம் இருப்பதாகச் சொல்கிறார்.
"நான் ஒருவரை மனதாரக் காதலித்தேன். இருவரும் திருமணத்துக்கும் தயாரானோம். ஆனால், சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்ட அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். எனவே, வாய்ப்புக்காக நடிகைகளை இவ்வாறு தொல்லை செய்யும் வழக்கத்துக்கு முடிவுகட்ட வேண்டும்," என்கிறார் தேஜஸ்வி.
கொரோனா ஊரடங்கு தம்மை பெரிதாக பாதிக்கவில்லை என்று குறிப்பிடுபவர், இவ்வாறு தனிமையில் இருப்பது தமக்கு பழக்கமான ஒன்று என்கிறார்.
"சிறு வயதில் பலமுறை இவ்வாறு தனித்து இருந்திருக்கிறேன். அதனால் தனிமையோ தனிமைப்படுத்துதலோ எனக்கு ஒரு பொருட்டல்ல. சிறு வயதில் நீண்ட காலத்துக்கு என் குடும்பத்தைப் பிரிந்திருந்தேன். இந்த ஊரடங்கு வேளையில் சிறு வயது நினைவுகளை அசைபோட்டு வருகிறேன்.
"அதே சமயம் குடும்பத்தைப் பிரிந்திருப்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பது குறித்து பதிவிடுவதையும் புகைப்படங்களை பகிர்வதையும் பார்க்கும்போது எனக்கும் ஏக்கமாக இருக்கும்.
"இந்த காலகட்டத்தில் என் அம்மா அருகில் இல்லாதது மனதில் ஒருவித வெறுமையை ஏற்படுத்தி உள்ளது. அவரை அவ்வப்போது கனவில் காண்கிறேன். அந்தத் தருணங்களை நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
"அண்மைக் காலமாக அம்மாவை கனவிலாவது பார்க்க வேண்டும் என்பதற்காக நிறைய நேரம் தூங்குகிறேன்," என்று ஏக்கத்துடன் பேசுகிறார் தேஜஸ்வி.
ஊரடங்கின்போது சக நடிகைகளைப் போல் இவரும் திரைப்படங்கள், இணையத் தொடர்களை தொடர்ந்து பார்த்து வருகிறாராம். ஆனால் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார்.
"தற்போது நான் செய்திகளைப் படிப்பதில்லை. எந்தவொரு விஷயத்தையும் நேர்மறையாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும். இல்லையெனில் நம் மனமும் மூளையும் முடங்கிவிடும்," என்று பக்குவமாகப் பேசுகிறார் தேஜஸ்வி.

