மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'சண்டக்காரி'. விமலும் ஸ்ரேயாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
கதைப்படி லண்டனில் மிகப்பெரிய கணினி நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் ஸ்ரேயா. அவரது நிறுவனத்தில் கணினி நிபுணராகப் பணியாற்றுகிறார் விமல். இருவருக்கும் இடையேயான விஷயங்கள்தான் கதை.
"ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக கம்பீரமான, அதேசமயம் நவநாகரிகமான நாயகி என்றவுடன் என் மனதில் முதலில் தோன்றியவர் ஸ்ரேயாதான்," என்கிறார் மாதேஷ்.
இவர் சங்கர் இயக்கிய 'முதல்வன்', 'சாக்லேட்', 'மதுர' ஆகிய படங்களைத் தயாரித்தவர். திரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி'யை இயக்கியவர்.
இந்தப் புதுப்படத்தின் கதையை ஸ்ரேயாவிடம் விவரித்தபோது தம்மால் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க இயலுமா? என்று அவர் சந்தேகம் எழுப்பினாராம்.
"நான் இயல்பாகவே மிகவும் மென்மையானவள். எந்தப் படத்திலும் பெரும் கோபக்காரியாகவோ, அளவுக்கு மீறிய திமிரான பெண்ணாகவோ நடித்ததில்லை. என்னை நம்பி இப்படியொரு கோபக்காரியான கதாபாத்திரத்தை ஒப்படைக்கிறீர்களே என்று ஸ்ரேயா சந்தேகத்துடன் கேட்டார். அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தோம். நான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா.
"படத்தில் பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா, பிரபு சார், உமா பத்மனாபன், ரேகா, சத்யன் என்று நிறைய அனுபவ நடிகர்கள் உள்ளனர். ஒரு பாட்டி கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா மேடம் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்ததில் அவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி," என்று சொல்லும் மாதேஷ் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் படமாக்கி உள்ளார்.
தமிழக கிராமத்தில் நடக்கும் சில சம்பவங்களும் படத்தில் இருக்குமாம். விமலைப் பொறுத்தவரை கச்சிதமாக நடித்திருப்பதாகச் சொல்கிறார்.
லண்டனில் விமல், ஸ்ரேயா இடம்பெற்ற ஒரு துரத்தல் காட்சியைப் படமாக்கினராம். அப்போது இருவரும் கைப்பையுடன் மாறி மாறி ஓடும் காட்சியைப் பார்த்து பொதுமக்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
இந்நிலையில் லண்டன் போலிசாரே படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்துவிட்டனராம். யாரோ ஸ்ரேயாவின் கைப்பையை பறித்துக்கொண்டு ஓடுவதாக அவர்களுக்குப் புகார் போயிருக்கிறது. அதன்பிறகு நடப்பது படப்பிடிப்புதான் என்பதை அறிந்து சிரித்தனராம்.
"இப்படி நிறைய சுவாரசியங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். பொதுவாகவே சில படங்களைத் தயாரித்தவன் என்ற முறையில் தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து வைத்திருக்கிறேன். அதனால் ஒரு படத்தை இயக்கும்போது பொறுப்புடன் நடந்துகொள்வேன்," என்று சொல்லும் மாதேஷ், இயக்குநர் சங்கரின் நெருங்கிய நண்பர்.
அதனால் ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்ற நேர்த்தியைத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்.
'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்த விபத்து சங்கரை வெகுவாகப் பாதித்திருக்கும் என்று கவலைப்படுகிறார் மாதேஷ்.
"சங்கர் சார் தனது உதவியாளர்களைத் தன் குடும்ப உறுப்பினராகக் கருதுபவர். இந்த விபத்து நிச்சயமாக அவரைப் பாதித்திருக்கும். அதிலிருந்து மீண்டு வருவது சிரமம்தான். இருவரும் வேலைகளில் முனைப்பாக உள்ளோம். விரைவில் அவரை சந்திப்பேன்," என்கிறார் மாதேஷ்.

