'அந்நியன்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்றளவும் அப்படத்தைப் பற்றிப் பேசும்போது உற்சாகமாகிறார் இயக்குநர் சங்கர்.
தனது படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதுகுறித்துப் பேசப்படுவது மன நிறைவு அளிப்பதாகச் சொல்கிறார்.
"நாட்கள் எவ்வளவு வேகமாகக் கடந்து செல்கின்றன என்று நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது பொதுவாக ஒரு படத்தின் கதையை அதன் தலைப்பிலேயே சொல்லமுடியுமா என்று பார்ப்பேன்.
"தலைப்பின் மூலமாக ரசிகர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காக மெனக்கெடுவேன். ஒரு தலைப்பை எழுதுவதற்கான எழுத்து வகையைத் தேர்வு செய்வதற்கும்கூட நேரம் எடுத்துக் கொள்வது என் வழக்கம். 'அந்நியன்' பட நாயகன் அம்பி மென்மையான மனிதன். அந்நியனோ சக்தியும் வேகமும் நிறைந்த கதாபாத்திரம். இந்த இரண்டையும் மனதிற்கொண்டே தலைப்பை உருவாக்கினோம்.
"'அந்நியன்' கதையை சென்னையில் உள்ள ஒரு தங்கு விடுதியில் வைத்துதான் விக்ரமுக்குச் சொன்னேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர் எப்படி நடிக்கவேண்டும் என்பது தொடர்பான எனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தேன். அவருக்கான ஒப்பனை, வசன உச்சரிப்பு ஒன்றுக்கொன்று எப்படி வித்தியாசப்படும் என்று விவரித்தபோது அவர் நிறைய கேள்விகளைக் கேட்டபடியே இருந்தார். ஆனால், படப்பிடிப்பு துவங்கியதும் அந்தக் கேள்விகள் மறைந்து அவருக்கு எல்லாம் தெளிவானது.
"பொதுவாக ஒரு காட்சி தொடர்பான சில விஷயங்களை தனியாக எழுதி வைத்துவிடுவேன். அதேசமயம் சில விஷயங்கள், வசனங்கள் நடிகர்களிடமிருந்து இயல்பாக வெளிப்படும்போது நமக்கு ஈர்ப்பும் சிரிப்பும் வந்துவிடும். அத்தகைய நகைச்சுவைகளை அப்படியே பயன்படுத்திக் கொள்வேன்," என்று சொல்லும் சங்கர் இந்தப் படத்துக்காக விக்ரம் வெகுவாக மெனக்கெட்டதாகச் சொல்கிறார்.
அவரைப் போன்ற திறமையான அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகர்களைப் பார்ப்பது அரிது என்றும் பாராட்டுகிறார்.
"என்னைப் பொறுத்தவரை விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்தார் என்பேன். படத்துக்கான கதை தயாராகி வரும்போதே அவரை அழைத்து, 'அடுத்த படத்துக்குத் தயாராவோம்; முடி வளர்க்க ஆரம்பியுங்கள்' என்று கூறிவிட்டேன். 'அந்நியன்' கதாபாத்திரமாக மாறும்போது கண்கள் இருபக்கமும் சுழற்றவேண்டும் என்று கூறியதும் அதற்காக பயிற்சி செய்தார். அம்பியாக நடிக்கும் காட்சிகளைப் படமாக்கும்போது உடற்பயிற்சி செய்யாதால் சற்றே தொய்வாக வருவார். அந்நியனாக நடிக்கும்போது கடும் உடற்பயிற்சி செய்து தெம்பாகக் காட்சி அளிப்பார்.
"பிரகாஷ் ராஜ் அவரை விசாரிக்கும் காட்சி எங்கள் அனைவருக்குமே சவாலாக இருந்தது. இதற்காக தனது உடற்பயிற்சிக் கருவிகளை படப்பிடிப்புத் தளத்துக்குக் கொண்டுவந்தார் விக்ரம். காட்சிக்க நடுவே கடுமையாக உடற்பயிற்சி செய்வார். இதேபோல் அம்பியாக நடிக்கும்போது விற்றுத் தொப்பை தெரியவேண்டும் என்பதற்காக நிறைய தண்ணீர் குடிப்பார். அதனால்தான் சொல்கிறேன் விக்ரம் உயிரைக் கொடுத்து நடிக்கும் கலைஞன்," என்கிறார் சங்கர்.

