கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படம் 'ஜோஷ்வா இமை போல் காக்க'. இதில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகன் வருண் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'பப்பி' என்ற படத்தில் நடித்துள்ளார். வருணுடன் இணைந்து நடிப்பவர் ராஹேய்.
தன் மகனுக்காக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹே லவ் ஜோஷ்வா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக கௌதம் மேனன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் பலத்த வரவேற்பைப் பெறும். தமது படத்தின் பாடல்கள் கேட்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்று விரும்புவார் கௌதம். இந்நிலையில் இப்புதிய படத்துக்கு பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியுள்ளார்.
அது மட்டுமல்ல. இப்பாடலை தேசிய விருது பெற்ற ஷாசா திரிபாதிவுடன் இணைந்து பாடியும் உள்ளார் கார்த்திக்.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த கையோடு சில தொழில்நுட்பப் பணிகளை முடித்து படத்தை வெளியிட உள்ளனர்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் திரை கண்டது.
இதற்கான முயற்சிகளை ஐசரி கணேஷ் தான் மேற்கொண்டார். அதற்கு பலமுறை நன்றி தெரிவித்த கௌதம் மேனன், தற்போது ஐசரி கணேஷின் மகனையே நாயகனாக்கி தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

