கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'ஜெகமே தந்திரம்'.
இதன் முதல் தோற்ற சுவரொட்டி அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
கதைப்படி தனுஷ் மதுரையைச் சேர்ந்த ஒரு ரவுடிக் கூட்டத்தின் தலைவன் என்றும், அவர் லண்டன் சென்று அங்குள்ள சமூகவிரோதக் கும்பலின் தலைவனுடன் மோதுவார் என்றும் தகவல் வெளியானது.
அந்த லண்டன் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் படத்தின் மையக்கரு குறித்து குறிப்பிட்டுள்ளார் ஜேம்ஸ் காஸ்மோ.
லண்டனில் வசிக்கும் அவர் அங்குள்ள இந்திய ரவுடிக் கும்பல்களால் பல தொல்லைகளை எதிர்நோக்குகிறார். அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மதுரையில் இருந்து லண்டன் வருமாறு தனுசுக்கு அவர் அழைப்பு விடுப்பாராம்.
அதை ஏற்று லண்டன் வரும் தனுஷ், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது செயல்பாடு ஜேம்ஸ் காஸ்மோவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இதனால் அவரது தலைமையிலான குழுவின் செயல்பாடுகளும் அடியோடு மாறிப்போகிறது.
"இதுதான் இப்படத்தின் கதையோட்டம். இந்திய சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது எனக்கும் உற்சாகமளிக்கிறது," என்று அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜேம்ஸ் காஸ்மோ.
இவர் 'பிரேவ் ஹார்ட்', 'டிராய்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர்.
தனுசின் நடிப்பு தம்மைக் கவர்ந்திருப்பதாக மற்றொரு பேட்டியில் இவர் குறிப்பிட்டிருந்தார். 'ஜெகமே தந்திரம்' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க ஜோ ஜூ ஜார்ஜ், கலையரசன் இருவரும் துணைக்கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் மீதமுள்ள காட்சிகளைப் படமாக்கி விரைவில் வெளியிட உள்ளனர் என்று தகவல்.

