பிற மாநிலங்களில் இருந்து வரும் கலைஞர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே கொண்டாடப்படுவதாகவும் திறமை இருப்பவர்களுக்குத் திரையுலகில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும் நடிகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இவர், 'நடுநிசி நாய்கள்', 'மங்காத்தா', '7ஆம் அறிவு', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'பிரியாணி', 'ஜீரோ' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவரது அண்மைய டுவிட்டர் பதிவு திரையுலகில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது.
தன்னை ஒருசிலர் ஒதுக்கப் பார்ப்பதாகவும் அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து தாம் நன்கு அறிந்திருப்பதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தன்னை ஒதுக்க நினைப்பவர்களுக்கு தாம் பதிலடி கொடுக்க நினைத்ததில்லை என்றும் அனைவரையும் ஒரே மாதிரியாக, மரியாதையுடன் நடத்த மக்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"குறிப்பாக திரைத்துறைக்கு வெளியிலிருந்து வரக்கூடிய கலைஞர் பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே கொண்டாடப்படுவார்; கடவுளாகவும் பார்க்கப்படுவார்.
"கடின உழைப்பு என்றும் தோற்காது என்ற வழக்கமான வாக்கியம் பொதுவாக வெற்றி பெற்றவர்களை வைத்து மட்டும்தான் சொல்லப்படுகிறது. உங்களை ஒதுக்கி வைத்து உங்களது முயற்சிகளை மட்டம் தட்டி முதுகிலும் குத்துவார்கள். ஆனால், ஒருவர் தமக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்ய இந்தக் கசப்பான அனுபவங்களை தாங்கிக்கொள்ள வேண்டும்," என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரை மட்டமாக நடத்திவிட்டு பின்பு அவரை கடவுளாக்குவது சரியல்ல என்றும், மாறாக முதலில் மனிதர்களாக நடத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

