உலகம் முழுவதும் ஞாயிறு அன்று மட்டும் 183,020 பேர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் மட்டும் புதிதாக 116,000 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக உலக அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று அது கூறியது.
உலகம் முழுவதும் இதுவரை 8.7 மில்லியன் பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 461,000 பேர் பலியாகிவிட்டனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிருமி தொற்றால் பிரேசில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மட்டும் 50,000 பேர் இறந்துவிட்டனர்.
கொரோனா கிருமிக்கு அதிகமானோர் பலியானவர்களின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில் உள்ளது.
பிரேசிலில் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைத் தொட்டுள்ளது.
இந்த நிலையில் பிரேசிலில் கிருமிப்பாதிப்பு அடுத்த சில வாரங்களில் மேலும் புதிய உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே பிரேசிலில் அதிபருக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிபர் போல்சோனாரோவை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிபரின் ஆதரவாளர்களோ அவரது அதிகாரத்தை குறைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

