ஊரடங்கு நேரத்தில் பொழுது போகவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது என்கிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஒவ்வொரு நாளையும் தாம் மிகப் பயனுள்ள வகையில் செலவிட்டு வருவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் வெளியான 'கோமாளி', 'பப்பி' ஆகிய படங்களின் மூலம் இளையர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பி உள்ள இவர், மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த இரு மாத காலத்தில் பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டுள்ளாராம். எனினும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிடும் எண்ணம் இல்லை என்கிறார்.
கடந்த 3 மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார் சம்யுக்தா. தாம் நடனமாடும் காட்சிகள், உடற்பயிற்சி செய்வது, மற்ற சுவாரசியமான நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகளையும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிடுகிறார்.
உடற்பயிற்சி செய்வதென்றால் இவருக்குக் கொள்ளைப் பிரியமாம். ஆனால் ஊரடங்கால் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்.
"சினிமா சார்ந்த பணிகளில் ஈடுபடாததும் வருத்தமளிக்கிறது. ஆனாலும், வீட்டில் தினமும் நடனப் பயிற்சி மேற்கொள்கிறேன். தரை ஓவியங்கள் வரைவது, சமைப்பது ஆகியவற்றுடன் எவ்வாறு மனதில் இருப்பனவற்றை எழுத்தாக வடிப்பது என்பது குறித்தும் பயிற்சி பெறுகிறேன். அதுமட்டுமல்ல, அனுபவமுள்ள சிலரிடம் நடிப்புப் பயிற்சியும் பெறுகிறேன்," என்கிறார் சம்யுக்தா.
ஊரடங்கின்போது பெற்றோருடன் தங்கியிருப்பது மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிடுபவர், ஒருவேளை தனித்து இருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்.
"ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு சென்னையில் குடியேறலாம் என்று திட்டமிட்டிருந்தேன். பெற்றோரும் இம்முடிவை ஏற்றுக் கொண்டனர். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது சென்னைக்குச் செல்லாமல் இருந்ததே நல்லது என்று தோன்றுகிறது.
"கொரோனா கிருமித் தொற்று பாதிப்பில் இருந்து சென்னை மாநகரம் முழுமையாக விடுபட்ட பிறகுதான் அங்கு செல்வது குறித்து யோசிக்க முடியும்," என்று சொல்லும் சம்யுக்தா தமது தாய்மொழியான கன்னடத்திலும் புது வாய்ப்புகள் தேடி வருவது மனநிறைவு அளிப்பதாகச் சொல்கிறார்.
தமிழில் புதுப்படம் ஒன்றில் ஒரு பாடலையும் பாடப் போகிறாராம். இதுகுறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது என்கிறார்.
"தமிழில் கேட்ட சில கதைகள் என் மனதைக் கவர்ந்துள்ளன. அனுபவமுள்ள மற்றும் புது இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களுடன் அணுகியுள்ளனர்.
"ஆனால், நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பிய பிறகுதான்அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும். கன்னடத்தில் சிறந்த படங்களில் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன். தற்போதுள்ள நடிகர்களை விட என்னால் கன்னடத்தில் மிகச் சரளமாகவும் தவறுகள் இல்லாமலும் பேசமுடியும்.
"எனவே இந்த ஒரு தகுதியே கன்னடத் திரையுலகில் நான் நடிப்பதற்கு போதுமானது எனக் கருதுகிறேன்," என்று சொல்லும் சம்யுக்தா, பிற மொழிகளில் இருந்தும் தமக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவருவது மனநிறைவு தருவதாகச் சொல்கிறார்.
மழையில் நடனமாடுவது, இருசக்கர வாகனம் ஓட்டுவது, கடற்கரையில் மணலில் விளையாடி அலையில் குளிப்பது என்று பலவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் ஆனால் சூழ்நிலை இவற்றை அனுபவிக்க இடம் கொடுக்கவில்லை என்ற புலம்பலும் சம்யுக்தாவிடம் உள்ளது.
"கோடம்பாக்கத்தில் எனது திறமையைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதற்கு என சிலர் இருப்பது நெகிழ வைக்கிறது.
"மிக விரைவில் தமிழிலும் கன்னடத்திலும் எனது நடிப்பில் சிறந்த படைப்புகள் வெளியாகும் என நம்புகிறேன்," என்கிறார் இந்த இளம் நாயகி.

