'இப்போது பிரமிக்கிறேன்'

'இப்போது பிரமிக்கிறேன்'

3 mins read
2b43edee-a55b-4014-a945-1ba99530a973
முதல் படத்திலேயே மணி­ரத்­னம், ஏ.ஆர். ரகு­மான், அர்­ஜுன், அர­விந்த்­சாமி என்று இத்­தனை பிரபலங்களுடன் பணி­யாற்றி இருக்­கி­றேன். அப்போது திரையுலகத்தைப் பற்றி அதிகம் தெரியாது. எனவே இவர்களைக் கண்டு நான் பிரமிக்கவில்லை. சுதந்திரமாக நடிக்க முடிந்தது. அவர்களைப் பற்றி நான் அப்போது அறிந்திருந்தேன் என்றால் நிச்சயம் பயந்துபோயிருப்பேன் என்கிறார் கார்த்திக் கெளதம். படம்: ஊடகம் -

சினிமா குடும்­பத்­தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தா­லும் திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தில் தமக்கு ஆர்­வம் இருந்­த­தில்லை என்­கி­றார் கௌதம் கார்த்­திக்.

அண்­மைய பேட்டி ஒன்­றில் 'நானும் ரௌடி­தான்' படத்­தில் நடிக்க முடி­யா­மல் போன­தற்­காக தாம் மகிழ்ச்சி அடை­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

தாத்தா முத்­து­ரா­மன், தந்தை கார்த்­திக்கை தொடர்ந்து மூன்­றாம் தலை­மு­றை­யாக கோடம்­பாக்­கத்­தில் கால்­ப­தித்த கௌதம் கார்த்­திக் நடித்த முதல் பட­மான 'கடல்' வெளி­யாகி 8 ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன.

"சிறு வய­தில் இருந்து திரை­யு­ல­கத்­து­ட­னும் அதைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும் எனக்கு அதிக தொடர்­பு­கள் இல்லை. அத­னால் எனது முதல் படத்­தில் எத்­தனை பெரிய பிர­ப­லங்­கள் எல்­லாம் பங்­கேற்­றி­ருந்­த­னர் என்­பது குறித்து அப்­போது பெரி­தாக ஏதும் தெரி­ய­வில்லை. இப்­போது நினைத்­துப் பார்த்­தால் பிர­மிப்­பாக இருக்­கிறது.

"மணி­ரத்­னம் சார் இயக்­கம், ஏ.ஆர். ரகு­மான் இசை, அர்­ஜுன் சார், அர­விந்த்­சாமி சார் என்று எனது முதல் படத்­தி­லேயே இத்­தனை பேரு­டன் பணி­யாற்றி இருக்­கி­றேன்.

"அதே­ச­ம­யம் இந்­தப் பிர­மிப்பு படத்­தில் நடிக்­கும்­போது இருந்­தி­ருந்­தால் பயந்து போயி­ருப்­பேன். ஒருவகை­யில் சினிமா குறித்து அதி­கம் தெரி­யா­த­தால் அறி­முக படத்­தில் சுதந்­தி­ர­மாக நடிக்க முடிந்­தது," என்­கி­றார் கௌதம்.

தந்தை கார்த்­திக் இவ­ருக்கு நடிப்பு குறித்து எந்­த­வித அறி­வு­ரை­யும் கூற­மாட்­டா­ராம். ஒரே ஒரு முறை 'நீ யாரோ அதை நீ நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்­குள் கொண்­டுவா. அப்­போ­து­தான் உயிர்ப்பு இருக்­கும். நீ செய்­யும் தவற்றை நீயே சரி செய்­தால்­தான் வளர முடி­யும்' என்­றா­ராம் கார்த்­திக். இன்­று­வரை அதை மட்­டுமே பின்­தொ­டர்­வ­தா­கச் சொல்­கி­றார் கௌதம்.

'சிலம்­பாட்­டம்' பட இயக்­கு­நர் சர­வ­ணன் இயக்­கத்­தில் கௌத­மும் லட்­சுமி மேன­னும் இணைந்து நடித்த படம் 'சிப்­பாய்'. கடந்த சில ஆண்­டு­க­ளாக இப்­ப­டத்தை வெளி­யிட முடி­யா­மல் முடங்­கிக் கிடக்­கிறது. அதற்­கான கார­ணம் என்ன?

"அப்­ப­டத்­தின் 95 விழுக்­காடு பணி­கள் முடிந்து­விட்­டன. இது­வரை எடுக்­கப்­பட்ட காட்­சி­க­ளுக்­கான படத்­தொ­குப்பு, பின்­னணி இசை சேர்ப்பு, பின்­ன­ணிக் குரல் பதிவு என்று எல்­லாமே முடிந்­து­விட்­டன. இப்­ப­டத்­தின் இறு­திக் காட்­சியை மட்­டுமே பட­மாக்க வேண்­டும். ஆனால் தயா­ரிப்­பா­ள­ருக்கு இருந்த சில சொந்­தப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக திடீ­ரென படத்­தைக் கிடப்­பில் போட்டு விட்­ட­னர்.

"ஆனால், இன்­று­வரை தயா­ரிப்­பா­ளர், இயக்­கு­நர் இரு­வ­ரி­ட­மும் பேசிக்­கொண்­டு­தான் இருக்­கி­றேன். அவர்­கள் தயார் என்­றால் நானும் தயா­ராகி விடு­வேன்," என்று சொல்­லும் கௌதம், கித்தார் வாசிப்­ப­தில் கெட்­டிக்­கா­ர­ராம். தனக்கு ஓர­ளவு நன்­றாக பாட­வும் வரும் என்­கி­றார். ஆனால், இது­வரை தாம் நடித்த படங்­க­ளின் இசை­ய­மைப்­புப் பணி­களில் அறவே தலை­யிட்­ட­தில்லை என்­றும் சொல்­கி­றார்.

"கட­வுள் ஆசீர்­வா­தத்­தால் எனது படங்­க­ளுக்கு பெரிய இசை­ய­மைப்­பா­ளர்­கள் அமைந்­த­னர். 'முத்துரா­ம­லிங்­கம்' படத்­துக்கு இளை­ய­ராஜா, 'கடல்' படத்­துக்கு ஏ.ஆர்.ரகு­மான், 'வை ராஜா வை' படத்­துக்கு யுவன் சங்­கர், 'என்­னமோ ஏதோ'வுக்கு இமான் என்று அனை­வ­ருமே பல நல்ல பாடல்­க­ளைக் கொடுத்­துள்­ள­னர்," என்று சொல்­லும் கௌதம், தாம் நடிக்­கா­மல் கைவிட்ட வெற்றி பெற்ற படங்­கள் பல என்­கி­றார். 'நானும் ரௌடி­தான்' பட­மும் அவற்­றில் ஒன்­றாம்.

"ஒவ்­வொரு நடி­க­ருக்­கும் இது­போன்று நடிக்கத் தவ­றிய படங்­க­ளின் பட்­டி­யல் இருக்­கும். சில படங்­களை ஏன்விட்டோம் என்று வருத்­தம் ஏற்­படும். சில படங்­க­ளைக் கைவிட்­ட­தற்கு மகிழ்ச்சி அடை­வோம். ஒரு படத்­தில் நடிக்க மறுத்­து அதற்காக நான் சற்­றும் வருத்­தப்­ப­ட­வில்லை என்­றால் அது 'நானும் ரௌடி­தான்'.

"கார­ணம் நான் நடிக்­கா­த­தால்­தான் விஜய் சேது­பதி அண்­ணா­வி­டம் அந்த வாய்ப்பு சென்­றது. அவர் நடித்­த­தால்­தான் படம் வெற்றி பெற்­றது. நான் நடித்­தி­ருந்­தால் இவ்­வ­ளவு பெரிய வெற்றி சாத்­தி­ய­மில்லை. என­வே­தான் அந்த வாய்ப்பை இழந்­த­தற்­காக இன்­று­வரை மகிழ்ச்­சி­யாக உணர்­கி­றேன்," என்­கி­றார் கௌதம் கார்த்­திக்.