'மாஸ்டர்' படம் வெளியாகும் முன்பே அதன் நாயகி மாளவிகா மோகனனுக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியை வைத்து 'மாம்' (MOM) படத்தை இயக்கிய ரவி உத்யவார் இப்படத்தை இயக்குகிறார்.
சண்டைக்காட்சிகளுக்காக பல்வேறு தற்காப்புக் கலைகளை ஓரளவேனும் கற்றுக்கொண்டால் நல்லது என இயக்குநர் அறிவுறுத்தவே, தற்போது இணையம் மூலம் 'குங்ஃபூ' உள்ளிட்ட கலைகளைக் கற்று வருகிறாராம் மாளவிகா.
இதற்கிடையே அண்மைய பேட்டி ஒன்றில் தேவையற்ற நக்கல், நையாண்டி, ஆபாசப் பேச்சுகளைத் தம்மால் ஏற்க இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பேச்சுகளை அனைத்துத் தரப்பினரும் தட்டிக்கேட்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த இளம் நாயகி, சமூக வலைத்தளங்களில் பெண்களை ஒரு தரப்பினர் கேலி செய்வது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார்.
"பெண்கள் சமைப்பதற்கு மட்டுமே லாயக்கு என்பதுபோல் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அது தவறு. பெண்கள் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். அதற்குரிய தகுதி பெண்களுக்கு உள்ளது என்பது அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட வேண்டும்.
"அதனால்தான் 'மாஸ்டர்' படத்துக்காக ஒரு ரசிகர் உருவாக்கிய சுவரொட்டி என்னைப் பாதித்தது.
"அதில் 'மாஸ்டர்' படக்குழுவினர் ஊரடங்கின்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்ற கற்பனையின் அடிப்படையில் நான் வீட்டில் சமைத்துக் கொண்டிருப்பதாக சித்திரித்திருந்தார்.
"உண்மையில் அந்தச் சுவரொட்டியை உருவாக்கியவர் இனிமையானவர். தவறான நோக்கத்துடன் அப்படிச் செய்யவில்லை. எனினும் அது என்னைப் பாதித்தது," என்கிறார் மாளவிகா.
பாலினப் பிரதிநிதித்துவம் முக்கியம் என்று குறிப்பிடும் அவர், ஆண்கள் மட்டும் வெவ்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் சமைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.
இத்தகைய எண்ணங்களும் கருத்துகளும் மக்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டதாகக் குறிப்பிடுபவர், இதை மாற்றவேண்டும் எனும் நோக்கத்துடனேயே தாம் அந்தச் சுவரொட்டியை உருவாக்கியவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறுகிறார்.
"இதனால் எழக்கூடிய எதிர்வினைகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன். என்னால் தேவையற்ற நக்கல், நையாண்டிப் பேச்சுகளை ஏற்க இயலாது. ஆபாசமாக கருத்து தெரிவித்தால் அதைக் கண்டிக்கிறேன்," என்கிறார் மாளவிகா.
சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் உருவத்தையும் குணத்தையும் வைத்து சிலர் கேலியான பதிவுகளை வெளியிடுவதாகச் சுட்டிக்காட்டுபவர், பொது விஷயங்கள் குறித்து நடிகைகள் தெரிவிக்கும் கருத்து களையும் சிலர் கேலிக்குள்ளாக்குவதாகக் கோபப் படுகிறார்.
"இதுகுறித்தெல்லாம் யோசித்து கருத்துத் தெரிவிக்க வேண்டுமா அல்லது ஒதுங்கிக் கொள்ளலாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு பேசினால் அதனால் வரும் எதிர்வினைகளைச் சமாளிக்க வேண்டும்.
"இதனால் ஏன் நமது மன அமைதியைக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வப்போது தோன்றும். மொத்தத்தில் மக்களின் மனநிலை மாறவேண்டும்," என்கிறார் மாளவிகா மோகனன்.
தமிழில் விஜய் படம் மூலம் ரசிகர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் கோடம்பாக்கத்தில் நீடிப்பாராம்.
வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படங்கள் மட்டுமல்லாமல் தன் திறமைக்கேற்ற, நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரங்களும் தமக்குத் தேவை என்கிறார். மாளவிகா சம்பள விஷயத்தில் மட்டும் கறாராக இருப்பார் என்கின்றனர் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.

