ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம், டிக்டாக், ஹலோ, வாட்ஸ் ஆஃப் என சமூக வலைப்பக்கங்கள் என்பன இன்றைய நவீன உலக அன்பர்களுக்குக் கிடைத்த வரம். ஆனால் அதைச் சிலர் சாபமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபல நடிகைகளும் கனவுக்கன்னிகளும் தங்களின் வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்களை தங்கள் மீதே கவனம் செலுத்த வைக்க இந்த வலைப்பக்கங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
பிரபலங்களை பின் தொடரும் சாமானியர்கள் தங்களின் அபிமானத்திற்கு உரியவர்களின் மனதில் இடம் பிடிக்க சமூக வலைத்தளங்கள் நல்ல வாய்ப்பாக அமைகின்றன.
அண்மையில் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் ஒருவர் தாம் உடற்பயிற்சி செய்யும் 'ட்ரெட்மில்'லில் கமல் நடித்த ' அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ' பாடலுக்கு அழகாக நடனமாடி அவரது பாராட்டை டுவிட்டர் மூலம் பெற்றார். இது ஆரோக்கியமான அணுகுமுறை. ஆனால், ஒரு சிலரோ ஆபாசமான, அடாவடியான, உண்மையற்ற தகவல்களைக் கொண்டு பதிவிடுவது சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது.
இதனால் பல பிரபலங்கள் இந்த வலைப்பக்கங்களில் இருந்து வெளியேறுவதும் அதிகரித்துள்ளது.
தனுஷின் முதல் இந்திப் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவரும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான சோனம் கபூர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுடன் ஜாலியாக கலந்துரையாடல் செய்து வருகிறார்.
சுற்றுச்சூழல் குறித்து சோனம் ஒரு கருத்தைச் சொல்லப்போக, "உங்களை மாதிரியான ஆடம்பர விரும்பிகள் தனி ஒருவராக பயணம் செய்ய படகுக்கார்களைப் பயன்படுத்துவதால்தான் சுற்றுச்சூழல் மாசும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது," என சூடாகச் சொன்னார் ஒரு ரசிகர்.
இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து, அந்த ரசிகரைப் பாராட்டினர்.
உடனே டுவிட்டரில் இருந்து வெளியேறிய சோனம், பிறகு மனதை மாற்றிக் கொண்டு "சில தினங்களுக்கு டுவிட்டர் கலந்துரையாடல் இல்லை," என அறிவித்துவிட்டு மீண்டும் டுவிட்டரில் இணைந்தார்.
சோனம் போலவே சோனாக்ஷியும் திரும்ப வருவாரோ என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற கண்ணடி காட்சி மூலம் இந்திய அளவிலும் ஏன்... நாடாளுமன்றம் வரையிலும் பிரபலமானவர் பிரியா வாரியர்.
இதனால் பிரியாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் 70 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் திடீரென்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.
ரசிகர்கள் என்ற போர்வையில் பலர் அவரைப் பற்றி கண்டபடி கருத்துகளைப் பதிவு செய்வதால்தான் அந்தப் 'புருவப் பெண்' இப்படியொரு முடிவை எடுத்தாராம்.
விலங்குகளிடம் அன்பு செலுத்தும் திரிஷா 'பீட்டா' அமைப்பின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட்டார். அந்த அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியதால் பீட்டாவுடன் சேர்த்து, அதன் பிரதிநிதியான திரிஷா மீதும் ரசிகர்கள் கோபப்பட்டனர்.
டுவிட்டரில் பலரும் கோபக் கருத்துகளைப் பதிவிட, எதிர்ப்பைச் சமாளிக்க டுவிட்டரிலிருந்து வெளியேறிய திரிஷா, பிறகு சூழலின் சூடு குறைந்ததும் மீண்டும் அதில் இணைந்தார். இந்நிலையில் மீண்டும் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
"நான் மீண்டும் திரும்பும் வரை உங்களுக்கு என் அன்பு. இந்த நேரத்தில் எனக்கு மறதியும் ஓய்வும் தேவை. இந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்," எனத் தெரிவித்துள்ளார் திரிஷா.
'குத்து' படத்தில் சிம்புவுடன், 'பொல்லாதவன்' படத்தில் தனுஷுடனும் நடித்த திவ்யா ஸ்பந்தனாஸ். சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கர்நாடகா மாநில அளவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரும் டுவிட்டரிலிருந்து அரசியல் காரணமாக வெளியேறியுள்ளார்.
'ஒரு நாள் கூத்து' படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியுடன் 'டிக் டிக்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'பார்ட்டி' படத்திலும் நடித்து வருகிறார். இவர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் முனைப்பாக செயல்பட்டு வந்தவர். யார் கண்பட்டதோ, நிவேதாவும் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தவறான தகவல்கள் மற்றும் அநாகரிகமான பதிவுகள் அதிகரித்ததால் வேதனை அடைந்தாராம் நிவேதா.
அதே சமயம்... "இன்ஸ்டகிராமில் எனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன்," என்று தெரிவித்துள்ளார் நிவேதா.
அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப்பகுதியில் மோதல் வெடித்தது. இதையடுத்து நாட்டில் பலரும் சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் எனவும் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், சீனாவின் 'டிக்டாக்' மற்றும் 'ஹலோ' செயலிகளைப் புறக்கணித்து அதில் வைத்திருந்த தனது அதிகாரபூர்வ கணக்குகளை அழித்துவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும், "நீங்கள் எப்போது இதைச் செய்யப் போகிறீர்கள்?" என்றும் கேட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் 'காலா', அஜித்தின் 'விஸ்வாசம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் பல தெலுங்குப் படங்களிலும் நடித்திருப்பதுடன், 'பிக்பாஸ் (தமிழ்) - 3' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
அவரது 'டிக்டாக்' கணக்கில் சுமார் 2.18 லட்சம் பேர் பின்தொடர்ந்த நிலையில்... "சீனாவில் உருவாக்கப்பட்ட செயலி எனக்கெதுக்கு?" என அந்த 'ஆஃப்'பிற்கு 'ஆப்பு' வைத்துள்ளார் சாக்ஷி.
இப்படியாக... சமூக வலைத்தளங்களிலிருந்து போவதும் வருவதும் கிளம்புவதும் திரும்புவதுமாக இருக்கிறார்கள் பிரபலங்கள். ஆனால்... காரணங்கள் மட்டும் வேறுவேறாக இருக்கின்றன.

