இந்த ஊரடங்கு வேளையில் இளையர்களும்கூட பழைய திரைப்படங்களைப் பார்ப்பது, பழம்பெரும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் முடங்கிக் கிடப்பது தனக்கு எந்த வகையிலும் சலிப்பையோ, மன அழுத்தத்தையோ ஏற்படுத்தவில்லை என்கிறார் பழம்பெரும் நடிகை விஜயகுமாரி.
'பூம்புகார்' உட்பட பல்வேறு வெற்றிப் படங்களில் நாயகியாகவும் குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகை இவர். தனது கணவரும் நடிகருமான எஸ்.எஸ்.ஆர். எனப்படும் எஸ்.எஸ். ராஜேந்தருடன் இணைந்து நடித்து கடந்த 1950-60களில் தமிழ் சினிமாவில் வெற்றி வலம் வந்தவர் விஜயகுமாரி.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தனிமை வாழ்க்கை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தமக்குப் பழகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தேவையின்றி வீட்டை விட்டு நான் வெளியே செல்வதில்லை. சென்னையில் உள்ள பெரிய வணிக வளாகங்களுக்கும் நான் போனதே இல்லை. மக்கள் சிரமப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கொரோனா எப்போது ஒழியும் என்பது யாருக்குமே தெரியாது என்பதை நினைத்தாலும் கலக்கமாக இருக்கிறது.
"தினமும் காலை 4 மணிக்கெல்லாம் கண் விழித்து விடுவேன். அதன்பிறகு பூசை செய்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு சில சுலோகங்களை எழுதி முடிப்பதற்குள் 10 மணி ஆகிவிடும். அதன்பிறகுதான் பசியாறுவேன். வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் நானேதான் சமைத்துச் சாப்பிடுவேன்," என்று கணீர் குரலில் பேசுகிறார் விஜயகுமாரி.
திரையுலகில் தீவிரமாகப் பணியாற்றியபோதும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் சென்னை கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்வாராம். அங்கேயே உடற்பயிற்சி, யோகா செய்துவிட்டுதான் வீடு திரும்புவாராம்.
வயதாகிவிட்டாலும் இவர் உணவுக் கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றுவதில்லை. சிறுவயது முதல் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்ததுதான் தம்மை இப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாகச் சொல்கிறார்.
இவர் கடைசியாக நடித்த படம் 'காதல் சடுகுடு'. விக்ரம் நடித்த இப்படம் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் வெளியீடு கண்டது. அத்தோடு நிறைவடைந்த 50 ஆண்டுகால சினிமா வாழ்வு போதுமென்று ஒதுங்கி சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
தனது சமகால நடிகைகளான சரோஜாதேவி, லதா, ஷீலா உள்ளிட்டோருடன் இன்றளவும் தொடர்பில் இருக்கிறார் விஜயகுமாரி. சரோஜாதேவி சென்னை வந்தால் இவர் வீட்டுக்கு வருவாராம். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்களாம்.
"இப்போதெல்லாம் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் அவ்வப்போது வெளியாகின்றன. எனது வாழ்க்கையும் ஒருவேளை திரைப்படமாகலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் எனது கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். காரணம், ஜோதிகா முகத்தில் அஷ்டாவதானம் தாண்ட வமாடுகிறது. மிகச்சிறப்பாக நடிக்கிறார்," என்கிறார் விஜயகுமாரி.

