கோடம்பாக்கத்தில் வெடித்த புது சர்ச்சை

இந்தி நடி­கர் சுஷாந்த் சிங்­கின் மர­ணம் இந்­தி­யத் திரை­யு­ல­கில் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்தி நாய­கர்­க­ளுக்கு மத்­தி­யில் ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக சுஷாந்த் சிங் பல வகை­யி­லும் திரை­யு­ல­கத்­தி­ன­ரால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் தமிழ் சினி­மா­வி­லும் இத்­த­கைய பிரச்­சினை இருப்­ப­தாக சிலர் கூறு­கி­றார்­கள்.

மற்ற திரை­யு­ல­கங்­க­ளு­ட­னும் ஒப்­பி­டு­கை­யில் தமிழ்ச் சினி­மா­வில் கதா­நா­ய­கர்­க­ளுக்கு இடையே எந்­த­வித அர­சி­ய­லும் இல்லை என்­கி­றார் பிர­பல தயா­ரிப்­பா­ள­ரும் இயக்கு நருமான கேயார்.

ஆனால், கோடம்­பாக்­கத்­தில் உள்ள தயா­ரிப்­பா­ளர்­கள், விநி­யோ­கிப்பாளர்களுக்கு இடை­யே­தான் பிரச்­சி­னை­களும் பாதிப்­பு­களும் அதி­கம் என இவர் அதிர்ச்சி குண்டு போடு­கி­றார்.

ரஜி­னி­யின் ‘தில்­லு­முல்லு’, கம­லின் ‘ராம் லட்­சு­ம­ணன்’ உட்­பட ஏரா­ள­மான படங்­களை விநி­யோ­கித்த அனு­ப­வம் கொண்­ட­வர் இவர். மேலும் திரைத்­துறை சார்ந்த பல சங்­கங்­க­ளி­லும் முக்­கி­யப் பொறுப்பு களை வகித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் நடி­கர்­கள் அஜித், சூர்யா கார்த்­திக் மீது கேயார் சில புகார்­களை அடுக்­கு­கி­றார். அவ­ரது அண்­மைய பேட்டி கோடம்­பாக்­கத்­தில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

“பொது­வாக குறிப்­பிட்ட ஒரு துறை­யில் ஒரு­வர் முன்­னே­றும்­போது அந்­தத் துறைக்கு என்ன கைமாறு செய்­யப் போகி­றார் என்று பார்க்­க­வேண்­டும். தங்­களை ஏற்றிவிட்ட ஏணிக்கு ஏதா­வது செய்­ய­வேண்­டும் எனும் நினைப்பு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இருக்க வேண்­டும். ஒரே குடும்­பம் என்­றா­லும் ரஜி­னி­யும் தனு­ஷும் வெளித் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­குத்­தான் தங்­கள் படங்­க­ளைக் கொடுக்­கி­றார்­கள். ஆனால் சிவ­கு­மார் குடும்­பம் அப்­ப­டிச் செய்­வ­தில்லை.

“சூர்யா, கார்த்தி, ஜோதிகா என்று அவர் குடும்­பத்­தில் மூன்று நட்­சத்­தி­ரங்­கள் உள்­ள­னர். எனி­னும் மீண்­டும் மீண்­டும் தங்­கள் சொந்­தத் தயா­ரிப்­பில்­தான் மூவ­ரும் நடிக்­கின்­ற­னர். லாபத்­தை­யும் தங்­க­ளுக்­குள்­ளேயே பகிர்ந்து கொள்­கின்­ற­னர்.

“சிவ­கு­மார் எனும் நடி­கரை வளர்த்­து­விட்ட திரை­யு­ல­குக்கு இத­னால் எந்­த­வி­தப் பய­னும் இல்லை. சிவ­கு­மா­ரால்­தான் அவர்­கள் மூவ­ரும் உரு­வாகி உள்­ள­னர். இதை அந்­தக் குடும்­பம் எப்­போ­தா­வது நினைத்­துப் பார்க்கவேண்­டும்,” என்­கி­றார் கேயார்.

மேலும் நடி­கர் அஜித் தொடர்ந்து ஸ்ரீதே­வி­யின் கண­வர் போனி­க­பூ­ருக்கு மட்­டும் கால்­ஷீட் கொடுப்­பது அதி­ருப்தி அளிப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

“ஸ்ரீதேவி கேட்­டுக்­கொண்­ட­தால் போனி கபூ­ருக்கு கால்­ஷீட் கொடுத்து ‘நேர்­கொண்ட பார்வை’ படத்தில் நடித்­தார் அஜித். அடுத்து ‘வலிமை’யையும் போனி­க­பூர் நிறுவனம்­தான் தயா­ரிக்­கிறது. ஏன் தமி­ழில் வேறு தயா­ரிப்­பா­ளர்­கள் இல்­லையா? அஜித்தை உரு­வாக்­கி, வளர்த்­து­விட்ட எத்­த­னையோ தயா­ரிப்­பா­ளர்­கள் உள்­ள­னர். அவர்­களுக்கு வாய்ப்­ப­ளிக்­க­லாமே?

“ஒரே ஒரு நிமி­ட­மா­வது நாம் எங்­கி­ருந்து வந்­தோம்? எப்­படி வளர்ந்­தோம் என்­பதை அஜித் நினைத்­துப் பார்க்கவேண்­டும். அவர் தன் மன­சாட்­சி­யைத் தட்­டிக் கேட்­கட்­டும்,” என்­கி­றார் கேயார்.

இந்த விஷ­யத்­தில் கமல், விஜய்­யைக் குற்­றம் சொல்­ல­மு­டி­யாது என்று குறிப்­பி­டு­ப­வர், விஜய் பல தயா­ரிப்­பா­ளர்­க­ளைத் தாமே அழைத்து வாய்ப்­புக் கொடுப்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

“இதெல்­லாம் சொல்­லிக் கொடுத்து, அல்­லது கட்­டா­யத்­தின் பேரில் வரு­வ­தல்ல. மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் செயல்­பட வேண்­டும். இப்­போது சிவ­கார்த்­தி­கே­யன் வரை பல நடி­கர்­கள் சொந்தத் தயாரிப்பு நிறு­வ­னம் வைத்­துள்­ள­னர். இனி வரும் காலம் இப்­ப­டித்­தான் இருக்­கும் போலி­ருக்­கிறது.

“கதா­நா­ய­கர்­களே தாயா­ரிப்­ப­ளர், இயக்­கு­நர்­க­ளைத் தேர்வு செய்­கி­றார்­கள். ஒரு கட்­டத்­தில் தங்­க­ளுக்கு ஒத்­து­வ­ர­வில்லை என்­றால் அனைத்­தை­யும் சொந்­த­மா­கவே பார்த்­துக் கொள்­கி­றார்­கள்,” என்று கேயார் சொல்­வதை ஒரு தரப்­பி­னர் பல­மாக ஆத­ரிக்­கின்­ற­னர்.

ஏற்­கெ­னவே கதா­நா­ய­கர்­கள் சம்­ப­ளத்­தைக் குறைக்க வேண்­டும் என தயா­ரிப்­பா­ளர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் குறிப்­பிட்ட தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மட்­டுமே நாய­கர்­கள் கால்­ஷீட் தரு­வது, தங்­கள் சொந்த நிறு­வ­னத்தை மட்டுமே வைத்து படம் தயா­ரிப்­பது ஆகி­யவை புது சர்ச்­சை­யைக் கிளப்பி உள்­ளது.