மாளவிகா: கருணையே அழகு சேர்க்கும்

ரஜி­னி­யின் ‘பேட்ட’ படத்­தில் கிடைத்த நுழைவு, விஜய்­யின் ‘மாஸ்­டர்’ படத்­தின் கதா­நா­ய­கி­யாக உயர்த்­தி­ய­து­டன், இன்று இந்­திப் படம் ஒன்­றில் ஐந்து கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறும் நாய­கி­யாக மாள­விகா மோக­னனை உயர்த்தி இருக்­கிறது.

ரஜினி சொல்­லிக்­கொ­டுத்த ஆன்­மிக விஷ­யங்­களும் கிரியா யோகா­வின் மகி­மை­களும் தன்னை ரொம்­பவே பக்­கு­வப்­ப­டுத்தி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் மாள­விகா.

தன் அப்பா மோக­னன் போல் (மோக­னன் சினிமா ஒளிப்­ப­தி­வா­ளர்) கேமரா மீது மிகுந்த ஈடு­பாடு கொண்ட மாளவிகா, ரஜினி விவ­ரித்த இம­ய­ம­லை­யின் நிசப்­தத்தை அனு­ப­விப்­ப­தற்­காக கடந்த ஆண்டு அங்கே சென்­றி­ருந்­தார். மலை­க­ளின் அசாத்­திய மௌனத்தை தன் கேம­ரா­வில் அள்­ளிக்­கொண்டு வந்­தார் மாள­விகா.

பிறகு திடீ­ரென காட்டு வாழ்க்கை மீது பிரி­யம் ஏற்­பட, தான்­சா­னியா நாட்­டிற்­குச் சென்று அங்­குள்ள காட்டு விலங்­கு­க­ளு­டன் சுற்­றி­விட்டு, அவை­க­ளின் வாழ்க்­கையை கேம­ரா­வில் பதிவு செய்து அசத்­தி­னார்.

அடுத்து மோட்­டார் சைக்­கிள் சாக­சத்­தில் ஆர்­வம் கொண்டு அதி­லும் தேறி­யி­ருக்­கி­றார். அவர் ‘புல்­லட்’ ஓட்­டு­கிற பாணி­தான் இந்­தி­யில் உரு­வா­கும் அடி­த­டிப் படம் ஒன்­றில் அதி­ரடி நாய­கி­யாக பாலி­வுட்­டில் நடிக்­கும் வாய்ப்­பைப் பெற்றுத் ­தந்­தி­ருக்­கிறது.

இப்­படி புதுப்­புது விஷ­யங்­களில் மாள­விகா ஆர்­வம் காட்ட உந்து சக்­தி­யாக இருப்­பது ரஜினி சொல்­லித்­தந்த கிரியா யோகா சூட்சுமமும் மாள­வி­கா­வின் சுய ஆர்­வ­மும்­தா­னாம்.

இப்­படி மாள­விகா புது­வி­த­மாக மாறி­யி­ருந்­தா­லும்­கூட, தன் நிறம் குறித்து கேலி செய்­தால் மிகுந்த ‘கோபக்­காரி’ ஆகி­வி­டு­கி­றார் என்­பதை அவ­ரது வலைத்­த­ளப் பதி­வு­கள் மூலம் புரிந்­து­கொள்ள முடி­கிறது என்­கி­றார்­கள் ரசி­கர்­கள்.

இந்­தக் கோபம் கார­ண­மாக அவ­ருக்­குப் பெண்­ணி­ய­வாதி என்­கிற முத்­தி­ரை­யும் விழுந்­தி­ருக்­கிறது.

‘நீங்­கள் பெண்­ணி­ய­வா­தியா?’ என்­கிற பொது­வெ­ளி­யில் அமைந்த கேள்­விக்கு, “ஆண்­களை வெறுப்­ப­வர்­கள், அவர்­கள் மீது கண்­மூ­டித்­த­ன­மாக குற்­றம் சுமத்­து­ப­வர்­கள், ‘இந்த ஆண்­களே இப்­ப­டித்­தான்’ என பொது­வான குற்­றம் சுமத்­து­ப­வர்­கள், இதை­யெல்­லாம் செய்­ப­வர்­கள் மட்­டும்­தான் பெண்­ணி­ய­வாதி என்­றால், நிச்­ச­யம் நான் பெண்­ணி­ய­வா­தி­யல்ல.

“ஏனென்­றால் நான் என் வாழ்க்­கை­யில் என் தந்தை உட்­பட பல அற்­பு­த­மான ஆண்­களை சந்­தித்­தி­ருக்­கி­றேன். ஆணும் பெண்­ணும் ஏழை­யும் பணக்­கா­ர­னும் எல்லா இனத்­த­வ­ரும் சமத்­து­வ­மாக மதிக்­கப்­ப­ட­வேண்­டும். அதை மட்­டுமே நான் விரும்­பு­கி­றேன்.

“நான் என் பெற்­றோ­ரால் சமத்­து­வம் சொல்லி வளர்க்­கப்­பட்­ட­வள். ஆணும் பெண்­ணும் கறுப்பு நிறத்­த­வர்­களும் சிகப்­பான நிறத்­த­வர்­களும் சம­மாக நடத்­தப்­படா­த­தைக் கண்­டிப்பதை, பெண்­க­ளுக்கு மரி­யாதை வேண்­டும் என்று கேட்­பதை பெண்­ணி­ய­வா­தம் என நீங்­கள் நினைத்­தால் நான் பெண்­ணி­ய­வா­தி­தான்,” என்­கி­றார் மாள­விகா.

அது மட்டு மல்ல, நிறம் நம்மை அழ காக்­காது என்­றும் ஒரு­வ­ருக்கு கருணை உள்­ளம் தான் அழகு சேர்க்­கும் என்­றும் கூறி, தன் அழ­குக்கு மேலும் அழகு சேர்க்­கி­றார் மாள­விகா.