ரசிகர்களைத் தற்காலிகமாக மகிழ்விப்பது மட்டுமே ஒரு நடிகைக்குப் பெயர் வாங்கித் தந்து விடாது என்கிறார் நித்யா மேனன்.
தாம் நடிக்கும் படங்கள் காலத்தைக் கடந்து நிற்கவேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான '7o clock' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பரவலாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
நித்யாவின் யதார்த்தமான நடிப்புக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் தமது திரைப்பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை என்றும் அனைத்தும் தன் போக்கில் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் நடிப்பது ஒரு பணி என்றால் இசை மற்றொரு பணி என்கிறார் நித்யா.
இவர் நன்றாகப் பாடுவார் என்பது பலருக்குத் தெரியவில்லை. இந்தக் கொரோனா ஊரடங்கு வேளையில் இரண்டு தனிப்பாடல்களைப் பாடியுள்ளாராம். இரண்டுமே ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார்.
"இசையை எனது திரைவாழ்க்கையின் முக்கியப் பகுதியாகக் கருதுகிறேன்.
"இத்தகைய படங்களில்தான் நடிக்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவது என் வழக்கமல்ல. வாய்ப்புகள் தானாகத் தேடிவந்தன. நானும் அவற்றை ஏற்றுக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை இத்தகைய கதைகள்தான் வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்பது மட்டுமே எனது இலக்கு. அந்தப் படங்கள் என்னை நினைத்து நானே பெருமிதம் கொள்ளும் வகையில் காலத்தைக் கடந்து நிற்கவேண்டும்," என்கிறார் நித்யா மேனன்.
அண்மைய ஓய்வைப் பயன்படுத்தி சில கதைகளும் எழுதி வருகிறாராம். நீண்ட நாட்களாகவே ஒரு திரைப்படத்திற்குரிய கதை, திரைக்கதையை எழுதவேண்டும் என்பது இவரது இலக்காக இருந்துள்ளது. ஆனால் தொடர் படப்பிடிப்புகள், இதர பணிகளின் காரணமாக கதை எழுதுவதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போனதாம்.
"இப்போது கதை எழுதும் பணியைத் தொடங்கிவிட்டேன். ஆனால், அதை எப்போது முடிப்பேன் என்பது தெரியாது. இதற்கென காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எழுதத் தோன்றினால் எழுதுகிறேன்... இல்லையென்றால் பேசாமல் இருந்துவிடுகிறேன்," என்று சொல்லும் நித்யா, இரண்டு இணையத் தொடர்களில் நடித்து முடித்துள்ளார்.
அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறாராம். 'ஓடிடி' எனப்படும் புதிய முறையின்கீழ் திரைப்படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாவது நல்ல முன்னேற்றம் என்பதே இவரது கருத்து.
"திரையரங்கங்களுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் சுகத்திற்கு ஈடு இணை இல்லை. அதேசமயம் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்புவது அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே நமக்கு ஏற்றவாறு ஒரு திரையை அமைத்துக்கொண்டு படங்களைப் பார்க்க பலரும் விரும்புகிறார்கள்," என்கிறார் நித்யா.
பொதுவாக சில மாதங்கள் இடைவிடாமல் உழைப்பவர் பிறகு திடீரென மாயமாகி விடுவாராம். ஒன்றிரண்டு மாதங்கள் ஓய்வெடுத்த பிறகு நடித்தால்தான் உற்சாகமாக இருக்கும் என்கிறார்.
"எப்படி கைபேசிகளை 'சார்ஜ்' செய்கிறோமோ அதேபோல் நம் உடலுக்கும் ஒரு சக்தி தேவைப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கும்போது உடலில் உள்ள ஒட்டுமொத்த சக்தியும் உறிஞ்சப்பட்டதாக உணர்வேன். அதனால்தான் வலுக்கட்டாயமாக ஓய்வெடுப்பேன்.
"ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அது எனக்கு புதிய நடவடிக்கையாகத் தோன்றவில்லை. வீட்டிலேயே இருப்பது எனக்குப் பழகிவிட்டது. இணையம் வழி நிறைய விஷயங்களைப் படிக்கிறேன், கற்றுக்கொள்கிறேன். வீட்டைச் சுத்தப்படுத்துவது, சமைப்பது, அழகுபடுத்துவது என எல்லாம் செய்கிறேன்.
"மீண்டும் இயல்புநிலை எப்போது திரும்பும் என்பது தெரியவில்லை. இப்போது எதற்கும் உத்தரவாதமும் இல்லை. ஆனால், இத்தகைய நிச்சயமற்ற தன்மையும்கூட என்னை ரசிக்க வைக்கிறது. இச்சூழ்நிலையில் நம் இதயம் செய்யச் சொல்லும் எந்த வேலையையும் தயக்கமோ பயமோ இன்றிச் செய்யலாம். இதுநாள்வரை நேரமின்மையால் எதையெல்லாம் செய்யமுடியாமல் தவித்தேனோ அவற்றை இப்போது செய்கிறேன்," என்கிறார் நித்யா மேனன்.

