அண்மைக்காலமாக திரைத்துறையில் நிறைய நேர்மறையான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தக் காலங்களில் கதாநாயகர்களின் பெயரால் மட்டுமே ஒரு திரைப்படம் மக்களிடம் போய்ச் சேர்ந்தது. ஆனால் தற்போதெல்லாம் படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. கதாநாயகர்களும் அதில் அடக்கம் அவ்வளவுதான்.
எத்தனை பெரிய முன்னணி நடிகராக இருந்தாலும் முதல் நாளைக்குப் பிறகு படத்திற்கு கூட்டம் வரவேண்டுமென்றால் படம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
பெரிய எதிர்பார்ப்புடன் வந்த முன்னணி நடிகர்களின் படங்கள் கண்டும் காணாமல் போனதும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி அடைந்த சிறிய 'பட்ஜெட்' படங்களும் உண்டு. இது ஒரு ஆரோக்கிய நிலை என்றால், கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் வளர்ந்து வருவது கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம்.
அந்தக் காலத்தில் கதாநாயகிகள் ஒரு காட்சிப்பொருளாகவே திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டனர். காதல் காட்சிகளுக்கும் பாடல்
களுக்குமே கதாநாயகிகள் என்று நிலை இருந்த காலமும் உண்டு. தற்போது அந்த நிலை முழுவதுமாக மாறிவிட்டது என்ற கூறிவிட முடியாது. இருந்தாலும் வேகமாக மாறி வருகிறது என்பது உண்மை.
சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், வெளிவர இருக்கும் 'குயின்' மறுபதிப்பு படத்தில் காஜல் அகர்வால் என பல உதராணங்கள் இருந்தாலும் 'சோலோ ஹீரோயின்' படம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது நயன்தாராதான்.
நடிகை நயன்தாரா தமிழ்த் திரையுலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பெருமையைப் பெற்றவர். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீப காலமாக இவரது வளர்ச்சி வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
தமிழ்த் திரையில் பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான். மேலும் இந்த ஆண்டு நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனாவிற்கு முன்பு இவரது நடிப்பில் 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற மலையாள படம் வெளிவந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதை
யடுத்து தற்பொழுது ரஜினிக்கு ஜோடியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பிரபலங்கள் பலரும் வருமானமின்றி வீட்டில் முடங்கியிருக்கின்றனர்.
ஆனால், நயனுக்கு மட்டும் எங்கிருந்துதான் வாய்ப்புகள் வந்து குவிகின்றதோ தெரியவில்லை. இந்த ஊரடங்கிலும் தலைவி விளம்பரங்களில் நடித்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து
வருகிறார். ஆம், தற்போது 'உஜாலா' விளம்பரத்தில் நடித்துள்ள காணொளியை நயன்தாரா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்து மற்ற நாயகிகளும் 'நாமும் இதுபோல் செய்யலாமே,' என்று யோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதில் முதலில் நயனைப்போல விளம்பரத்தில் நடிக்க காலெடுத்து வைத்திருப்பவர் நடிகை அமலாபால். இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆடை'. இந்தப் படத்தின் மூலம் பல படங்களில் நடிக்கச் சொல்லி இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன் வீட்டுக் கதவைத் தட்டுவார்கள் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இனி வேறு வழியைப் பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர் நயன்தாராவைப்போல இவரும் பிரபல கைக் கடிகாரம் ஒன்றை அணிந்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்.

