விஜய் தேவரகொண்டா திரைத்துறைக்கு வந்த பத்து ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் இருக்கிறார். குறுகிய காலத்தில் 'இன்ஸ்டகிராமில்' 8 மில்லியன் ரசிகர்களைப் பெற்று இமாலய சாதனை படைத்து இருக்கிறார். இவரைப் பார்த்து தென்னிந்திய நடிகர்களே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
விஜய் தேவரகொண்டா 2011ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் கலந்த நகைச்சுவைப் படமான 'நுவ்விலா' (2011) மூலம் அறிமுகமானார். ஆனால் அவர் 'யெவடே சுப்பிரமணியம்' (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார்.
விஜய் 2016ல் வெளியான காதல் நகைச்சுவைப் படமான 'பெல்லி சூப்புலு'வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த படத்திற்கான 'ஃபிலிம்ஃபேர்' விருது ஆகியவற்றைப் பெற்றார்.
அதன்மூலம் விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 'அர்ஜுன் ரெட்டி' (2017), 'மகாநடி' (தமிழில் நடிகையர் திலகம்) (2018), 'கீத கோவிந்தம்' (2018),' டாக்ஸிவாலா' (2018) போன்றவை அதிக வசூல் செய்த அவரின் தெலுங்கு படங்களின் பட்டியல்.
2017ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார்.
காதல், லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என சகட்டுமேனிக்கு கிளுகிளுப்பான அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது.
கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், அதுவும் இரண்டே படங்களில் ஒருவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. விஜய்க்கு ரசிகைகள் பட்டாளமும் அதிகரிக்கத் தொடங்கியது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கில் முன்னணி நாயகனாக
உருவெடுத்த விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தமிழில் 'நடிகையர் திலகம்', 'நோட்டா' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகைகளின் மனதிலும் அழகான, கம்பீரமான நாயகனாக இடம் பிடித்தார்.
ஊரடங்குக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா, கேத்ரின் தெரேசா, இசபெல் லெய்ட்டி என 4 நாயகிகள் நடித்திருந்தனர்.
இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா.
தென்னிந்தியாவிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த மொழி நடிகர்களுக்கும் கிடைக்காத ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவிற்கு கிடைத்துள்ளனர்.
இந்த இமாலய சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

