இந்த ஆண்டு தமது பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடியதாகக் கூறுகிறார் இளம்நாயகி சம்யுக்தா ஹெக்டே.
கடந்த 17ஆம் தேதி தனது 22வது பிறந்தநாளை தமக்குப் பிடித்த விதத்தில் கொண்டாடி மகிழ்ந்ததாக சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
தமிழில் 'கோமாளி', 'பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறாராம்.
சம்யுக்தாவை இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். இவர் ஓர் இயற்கை ஆர்வலர். படப்பிடிப்பு இல்லை என்றால் உடனே வெளியூர் பறந்து விடுகிறார்.
எங்கு சென்றாலும் அங்குள்ள வனப்பகுதிகள், மலைப்பகுதிகளில் சுற்றித் திரிவாராம். மலையேற்றப் பயிற்சியும் காடுகளை வலம் வருவதும் இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள்.
இம்முறை தமது பிறந்தநாளன்று வெளியூர், வெளிமாநிலங்கள் என்று எங்கும் செல்லமுடியாதபடி கொரோனா கிருமி தம்மை முடக்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிர்ஷ்டவசமாக ஒரு வனப்பகுதிக்கு அருகே தங்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.
"இந்தப் பிறந்தநாளன்று நான் தற்போது தங்கியுள்ள பகுதியில் பரந்து விரிந்துள்ள எஸ்டேட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரிந்தேன். எங்கு திரும்பினாலும் பசுமையான மரங்களும் சிறு நீர்நிலைகளையும் காணமுடிந்தது.
"இதைவிட சிறந்த பிறந்தநாளை இனிமேலும் அனுபவிக்க இயலுமா எனத் தெரியவில்லை. ஆசை தீர அங்கு நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.
பிறந்தநாளன்று இவருக்கு ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனராம்.
எனினும் தாம் தங்கியிருந்த பகுதியில் இணைய இணைப்பு மோசமாக இருந்ததால் தன்னைத் தொடர்புகொண்ட அனைவருடனும் பேச இயலாமல் போனது என்று வருத்தப்படுகிறார்.
"எல்லோருமே பிறந்தநாளன்று எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினர். ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் இந்த அன்பு என்னை நெகிழவைத்துள்ளது.
"இயற்கை என்பது மிகப்பெரிய சக்தி. அதனிடம் நீங்கள் மிக வலுவான ஒரு கோரிக்கையை முன்வைத்தீர்கள் எனில் நிச்சயமாக அது சாத்தியமாகும்," என்கிறார் சமயுக்தா ஹெக்டே.
"இயற்கையை நேசிக்கும் இவர் அதற்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயார் என்கிறார்.
சம்யுக்தா இப்படி என்றால் நடிகை ஷ்ருதி ஹாசன் நல்ல கதையும் கதா பாத்திரங்களும் தான் முக்கியம் என்கிறார்.
இவை இரண்டும் நல்லவிதமாக அமையும் பட்சத்தில் சம்பளம் குறித்து கவலைப்படாமல் நடிக்கத் தயார் என்கிறார் ஷ்ருதி.
"நிறைய படங்களில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
"நமக்கு திருப்தி ஏற்பட வேண்டும் என்பது தான் முக்கியம்.
"இதில் கவனம் தேவை," என்கிறார் ஷ்ருதி.
தமிழில் இப்போது மூன்று படங்களில் நடிக்கி றாராம் ஷ்ருதி.